புதுடெல்லி: சட்ட விரோத கடன் செயலிகள் மூலமான பணமோசடியை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. சட்டவிரோத செயலிகளைக் கண்டறிந்து அவற்றை நடத்துபவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சட்டவிரோத கடன் செயலி நிறுவனங்களிடமிருந்து ரூ.860 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நிய பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்நிறுவனங்களிடமிருந்து ரூ.290 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அனுமதி பெற்றுள்ள கடன் செயலிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி தயாரித்துள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள நிறுவனங்களை மட்டுமே ஆப் ஸ்டோர்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் மற்ற செயலிகளை நீக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சீனா உட்பட வெளிநாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட 232 கடன் மற்றும் சூதாட்ட செயலிகளை முடக்கியது குறிப்பிடத்தக்கது.