சென்னை, தேனாம்பேட்டை, அண்ணாசாலையிலுள்ள பிளாசா ஒன்றின் 6-வது மாடியில் பெயரே இல்லாத ஸ்பா ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஸபாவை சதீஷ் என்பவர் தன்னுடைய கூட்டாளி ஸ்ரீ சஞ்சீப் ராய் என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்தார். இங்கு பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவின் துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில் பாலியல் தொழில் தடுப்புப்பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ரெய்டு நடத்தினர். அதில் மசாஜ் என்ற பெயரில் வெளிமாநிலங்கள், சென்னையைச் சேர்ந்த பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.

இதையடுத்து ஸ்பாவை நடத்தி வந்தவரின் கூட்டாளியான ஸ்ரீ சஞ்சீப் ராய், பெங்களூரைச் சேர்ந்த கிளப் ஒன்றின் டீம் லீடர் வினோத் குமார் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களின் பிடியிலிருந்து இரண்டு தமிழ் பெண்கள், மூன்று வெளிமாநில பெண்களை போலீஸார் மீட்டனர். இந்த வழக்கில் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர்.
இது குறித்துப் பேசிய போலீஸார், “சென்னையில் பெண்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ரகசியமாக நடந்து வருகிறது. அது குறித்து கிடைக்கும் ரகசிய தகவலின்பேரில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தச் சமயத்தில்தான் தேனாம்பேட்டையிலுள்ள பிளாசா ஒன்றின் 6-வது மாடியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பது எங்களுக்கு தெரியவந்தது. அதை போலீஸ் இன்ஃபார்மர் மூலம் உறுதி செய்தோம். பின்னர் அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது, பாலியல் தொழில் நடந்தது தெரியவந்தது. தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்தக் கும்பல் கிளப், அறக்கட்டளை என்ற பெயரில் டெலிகாலர் வேலைக்கு பெண்களை பணியமர்த்தி அவர்கள் மூலம் ஹோட்டல் ரூம் புக்கிங் என்ற பெயரில் இந்தத் தொழிலைச் செய்து வந்தது தெரியவந்திருக்கிறது. அதனால் கிளப்பின் இயக்குநர், பொது மேலாளர் ஆகியோரைத் தேடிவருகிறோம். அவர்கள் சிக்கினால்தான் இந்த நெட்வொர்க்கின் முழு பின்னணி தெரியவரும்” என்றனர்.