சென்னை உயர்நீதிமன்றத்தில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் விதமாக, தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, எந்தெந்த வழித்தடங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது தொடர்பாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், “சென்னை போக்குவரத்து கழகம் சார்பில் நூற்று முப்பது கிராம வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இருப்பினும், அந்த சாலைகள் குறுகலாக இருப்பதால் தாழ்தள பேருந்துகளை இயக்கினால் பேருந்துகள் கடுமையாக சேதமடைவதற்கு வாய்ப்புள்ளது.
மேலும், 342 தாழ்தள பேருந்துகள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றை தோராயமாக 65 வழித்தடங்களில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், தாழ்தள பேருந்துகள் இயக்க முடியாத வழித்தடங்களில் மனுதாரரகள் தரப்பு உள்ளிட்டோரை இணைத்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்கு உத்தரவிட்டு, இந்த வழக்கு குறித்த விசாரணையை பிப்ரவரி மாதம் 20-ம் தேதிக்குள் ஒத்திவைத்தனர்.