"இதுவும் கடந்து போகும்…"- மீண்டும் அவகாசம் கோரியபின் மருத்துவர் ஷர்மிகா நம்பிக்கை!

சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவக் கருத்துகளை தெரிவித்த விவகாரம் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகா இன்று இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன், சித்த மருத்துவர் ஷர்மிகா என்பவர் இணையத்தில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக பலராலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. குறிப்பாக அவர் சில யூ-ட்யூப் சேனல்களில் ‘ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பகங்கள் வளர வாய்ப்புள்ளது, குழந்தை பிறப்புக்கு தேவை கடவுளின் ஆசிதான்’ உள்ளிட்ட கருத்துக்களை பேசியிருந்தது, புகாராக எழுந்தது.
image
தொடர் புகார்களை தொடர்ந்து, ஷர்மிகாவிடம் அவர் பேசியவற்றுக்கான விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் மற்றும் ஓமியோபதி வாரியம் உத்தரவிட்டது. இதுகுறித்த அறிவிப்பை இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழ்நாடுப் பிரிவு துணை இயக்குனர் பார்த்திபன், ஜனவரி 9-ம் தேதி வெளியிட்டிருந்தார்.
அதன்பேரில் ஷர்மிகா, அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் உள்ள இயக்குனராக அலுவலகத்தில் ஜனவரி 24-ம் தேதி இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் ஒருமணி நேரம் அந்த விசாரணை நடைபெற்றது. சித்த மருத்துவ முதல்வர் கனகவல்லி, மாநில மருந்து ஆய்வாளர் மேனக்ஷா, மருந்து ஆய்வாளர் உட்பட நான்கு பேர் கொண்ட குழு ஷர்மிகாவை விசாரணை செய்தனர்.
image
விசாரணை முடிவில், இதற்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஷர்மிகா அளிக்கவேண்டுமென அவருக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் இயக்குனரகத்தில் மருத்துவர் ஷர்மிகா தனது வழக்கறிஞர்களுடன் ஆஜராகினார். அப்பொழுது, மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு இன்று மீண்டும் விசாரணை நடத்தியது.
ஆனால் அப்போது தன் முந்தைய கருத்துகளுக்கு உரிய விளக்கத்தினை அளிக்காமல், மீண்டும் கால அவகாசம் கோரினார் ஷர்மிகா. கடந்த முறை ஆஜரான பொழுது கேட்கப்பட்ட அதே மூன்று கேள்விகள் தான் இன்று கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றுக்கு ஷர்மிகா, வாய்மொழியாகவே விளக்கமளித்துள்ளார். இதனால் அந்த விளக்கம் ஏற்புடையதல்ல, எழுத்துப்பூர்வமாக சமர்பிக்க வேண்டும் என்று குழுவினர் கேட்டுள்ளனர். இதனால் 24-ம் தேதி எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கிறேன் என ஷர்மிகா உறுதியளித்துள்ளார்.
விசாரணை முடிந்து வெளிவந்த அவரிடம் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிலர் `இவ்விவகாரம் பற்றி உங்களின் ஃபாலோயர்ஸூக்கு நீங்கள் சொல்ல நினைப்பது என்ன?’ என கேட்டதற்கு, “இதுவும் கடந்து போகும்” என்று சொல்ல நினைக்கிறேன் என்றுள்ளார் அவர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.