ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 4 பேர் பலியாகினர். பல வீடுகள் சேதமடைந்தன.
இதுகுறித்து இந்தோனேசி்யாவின் தேசிய பேரிடர் குழு கூறும்போது, “இந்தோனேசியாவின் பப்பூவா கியூனியா மாகாணத்தில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியது. இதன் மையம் ஜெயபுரா பகுதியில் உள்ளது. ஆழம் 10 கிமீ. இந்த நிலநடுக்கத்தினால் ஓட்டல் மற்றும் பல்வேறு வீடுகள் பாதிக்கப்பட்டன. நிலநடுக்கத்துக்கு இதுவரை 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்தோனேசியாவின் பிரதான தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 162 பேர் பலியாகினர். இறந்தவர்களில் பலர் பள்ளி மாணவர்கள். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
2004-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் 9.3 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமி தாக்குதலை அடுத்து 2,20,000 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.
பூகம்பம் உள்ளிட்ட பேரழிவுப் பிரதேசங்களில் இந்தோனேசியா முதன்மையான இடமாக உள்ளது. பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் தான் இந்தோனேசியா உள்ளது. இப்பகுதியில்தான் பூமியைத் தாங்கும் பெரும்பாறைகளும், தட்டுகளும் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும், மோதிக்கொள்ளும். இங்கு எரிமலை சீற்றங்களும், நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.