மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பதில் அளிக்கும்போது, அவரது வெளிர் நீல நிற `பந்த் காலா’ ஜாக்கெட் அணிந்து வந்த படங்கள் ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கோட்டில்…
பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட வெளிர் நீல நிற ஜாக்கெட் அணிந்து வந்துள்ளார்.
இந்த ஜாக்கெட் பெங்களூருவில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வார விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) பிரதமர் மோடிக்கு வழங்கியது. இந்தியன் ஆயில், அதன் ஊழியர்களுக்கும் ஆயுதப்படைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடைகள் உருவாக்க 10 டன் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆடையை பிரதமருக்கு வழங்கியுள்ளது.
இந்த உடை கரூரில் அமைந்துள்ள ரெங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 28 பெட் பாட்டில்களை கொண்டு தயாரிக்கப்பட்ட துணி மூலமாக இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடைகளுக்கு தண்ணீர் வண்ணம் பயன்படுத்தப்படுவதில்லை. முதலில், நார் தயாரிக்கப்பட்டு, பின்னர் அது துணியாக மாற்றப்பட்டு, இறுதியாக, ஆடை தயாரிக்கப்படுகிறது. வழக்கமான வண்ணம் ஏற்றும் நடைமுறையில் இருந்து மாறுபட்டு இருப்பதோடு துணிகளின் சாயம் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிப்பதாக உள்ளது.