கலைஞர் பேனா நினைவு சின்னம் – சரத்குமார் பரபரப்பு அறிக்கை!

இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஞானி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பார்போற்றும் புகழுடன் நினைவுச்சின்னம் அமைப்பது அவசியம் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

1969 முதல் 2018 வரை திமுகவின் தலைவராகவும், 1969 முதல் 2011 வரை 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்து தமிழ் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பைச் செய்து, தமிழ்நாடு அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்து, தேசியத் தலைவராக உயர்ந்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

முற்போக்கு சிந்தனையாளராக, பகுத்தறிவாளராக, இலக்கிய பேச்சாளராக, 5 முறை தமிழ்நாட்டை ஆட்சிபுரிந்து தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி சிறந்து விளங்கிய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை, அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த தலைமுறையின் ஒப்பற்ற தமிழினத் தலைவர் என்று அனைவரும் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒரு சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளருக்கு, தமிழ் கலை, இலக்கியத்தை பேணி பாதுகாத்தவருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் சிறந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்று தான். அதனை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால், நினைவுச் சின்னத்தை அமைக்கும் இடம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நிச்சயமாக பேனா நினைவுச் சின்னத்தை கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் வைக்க முடியாது. நினைவுச்சின்னம் என்பது வேறு, நினைவிடம் என்பது வேறு. தாஜ்மஹால் உள்ளிட்ட உலகளவில் அமைக்கப்பட்ட பல நினைவுச்சின்னங்கள் சுற்றுலாமையங்களாக உருப்பெற்று அவர்களது புகழை தலைமுறை கடந்தும், நூற்றாண்டுகள் கடந்தும் நிலைபெற்று வாழச்செய்கிறது. ஒவ்வொரு தலைவருக்கும் நினைவுச்சின்னம் அமைப்பது என்பது அவசியம்.

1076 கி.மீ நீளம் கொண்ட தமிழ்நாட்டின் கடற்கரையை எடுத்துக்கொண்டால், வெளிநாடுகளில், தீவுகளில் காணக்கிடைப்பது போல மெரீனாவில், அதுவும் சென்னை கடல் பகுதியில் கடல் ஆமைகள், பவளப்பாறைகள் இல்லை என்று தான் ஆய்வுகள் கூறுகின்றன. அப்படி பவளப்பாறைகள் இங்கு அமைந்திருந்தால் ஆழ்கடல் நீச்சலுக்கான (Scuba Diving) சுற்றுலாத்தளமாக இது உருவாகியிருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

நினைவுச்சின்னம் அமைக்க மெரீனா கடற்கரையில் இருந்து 1180 அடி தொலைவில் வங்கக்கடலுக்குள் செல்ல இருப்பது பெருந்தொலைவாக தெரியவில்லை. ஆனால், இதை விடச் சிறந்த ஓர் இடம் தமிழக அரசால் தேர்வு செய்ய முடிந்தால், கலைஞர் அவர்களுக்கு எவ்விடத்தில் நினைவுச்சின்னம் அமைத்தாலும் அது புகழைச் சேர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், உலகப்பொதுமறையான திருக்குறளை வழங்கி தமிழின் பெருமையை உலகறியச் செய்த திருவள்ளுவரை போற்றும் விதமாக, கன்னியாகுமரியில் கலைஞர் அவர்கள் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தார்கள். தற்போது அந்த சிலையோடு ஒப்பிட்டு அதனைவிட உயர்வாக நினைவுச்சின்னம் என்றில்லாமல் ஒரு அடி குறைத்து வைத்தால் அது முறையாக இருப்பதுடன், கலைஞருக்கு புகழுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் செயலாக அமையும்.

தமிழ் உணர்வு கொண்டவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழைப் போற்றுகிறவர்கள், தமிழன் என்று சொல்கின்ற அனைவரும் இந்த பேனா நினைவுச் சின்னம் உருவாக்குவதில் பங்கேற்க வேண்டும். நினைவுச்சின்னம் அமைக்கும் பணியை அரசு தான் செய்ய வேண்டும் என்றில்லாமல், தமிழினத்திற்கு பொதுவானவரை கெளரவிக்கும் பணி நமக்கான ஒன்றாக எடுத்துக்கொண்டு, உணர்வு கொண்ட தமிழர்கள் ஒன்றிணைந்து, இந்த உலகத்தமிழின தலைவருக்கு நிச்சயமாக ஓர் நினைவுச்சின்னம் எழுப்புவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.