சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக கடந்த ஜனவரி 3ஆம் தேதி ரேவதி என்ற பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கடந்த ஜனவரி 4ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சையின் பொழுது ரேவதிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால் தான் ரேவதி இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்த நிலையில் ரேவதியின் உடலை அடக்கம் செய்துவிட்டு தனியார் மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் மருத்துவ அறிக்கையை கேட்டுள்ளனர். அப்பொழுது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ரேவதியின் உறவினர்கள் மருத்துவமனையில் இருந்த கண்ணாடி மற்றும் இருக்கைகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரேவதியின் தந்தை சேட்டு, உறவினர்கள் மதன், ராஜ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.