லிப்ட் படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கவின், அடுத்ததாக நடித்திருக்கும் திரைப்படம் டாடா. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இருவரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ’டாடா’ சூப்பரான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்திற்கு கிடைத்திருக்கும் நேர்மறையான விமர்சனங்களால் மகிழ்ச்சியில் படக்குழுவினர் இருக்கும் நிலையில், நாயகி அபர்ணா தாஸ் உணர்ச்சிபூர்வமான கடிதம் ஒன்றை நடிகர் கவினுக்காக எழுதியிருக்கிறார்.
அதில், டாடா படத்துக்கு கவின் உழைப்பை பாராட்டியிருக்கும் அவர், எந்தவொரு சூழலிலும் ஒரு தோழியாக அவருக்கு பின்னால் எப்போதும் இருப்பேன் என்றும் கூறியுள்ளார். டிவிட்டரில் அபர்ணா தாஸ் வெளியிட்டிருக்கும் அந்த கடிதத்தில், ” நீங்கள் படத்திற்காக எவ்வளவு வேலை செய்திருக்கிறீர்கள் நான் பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் எல்லா துறைகளிலும் நீங்கள் இருந்தீர்கள். பெரும்பாலான நேர்காணல்களில் நான் உங்களைக் சீக்கிரம் கோபமடைந்துவிடுவார் என கூறினேன். ஆனால் இங்கே நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். சரியான விஷயங்களுக்காக மட்டுமே நீங்கள் போராடியிருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் அனைத்திற்கும் ஒரு நல்ல நண்பராக நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
— Aparna Das (@aparnaDasss) February 9, 2023
அண்மையில் டாடா இசை வெளியீட்டு விழாவில் பேசும்போதுகூட அபர்ணாதாஸ் உணர்ச்சி பூர்வமாக பேசியிருந்தார். அதில் டாடா படத்தில் நடிக்க கவின் தான் காரணம் என தெரிவித்தார். “கதாநாயகியாக நடிக்கும் முதல் தமிழ் படம் என்பதால் நான் உணர்ச்சிவச பட்டிருக்கிறேன். கேரளா வந்து கதை சொன்ன என் இயக்குனர் கணேஷுக்கு நன்றி. படம் முடியும் வரை எனக்கு உறுதுணையாக இருந்தார். கவின் தான் என்னை இயக்குனரிடம் அறிமுகப்படுத்தினார். கவின் இல்லாமல் நான் இந்த படத்தில் இருக்க மாட்டேன்” என கூறியிருந்தார்.