திரிபுரா: கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர், இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன், மலிவு விலை உணவகம் என திரிபுர சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக இலவச வாக்குறுதிகளை வாரி இரைத்துள்ளது. 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தக் நடைபெறுகிறது. அங்கு ஏற்கனவே உள்ள ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வரும் பாஜக நேற்றைய தினம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்ட அறிக்கையில் ஏராளமான இலவச வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
அந்த வகையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு விலை இல்லா ஸ்மார்ட்போன், உள்ளவர்களுக்கான நிதி உதவியாக ஒன்றிய அரசு வழங்கும் ரூ.6,000 உடன் மாநில அரசு சார்பில் கூடுதலாக ரூ.2,000 வழங்கப்படும். பழங்குடியின மக்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவி தொகையாக வழங்கப்படும் என்றும் பாஜக கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகம் போல திரிபுராவிலும் ரூ.5-க்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்களின் வாழ்வு மேம்பட வழங்கப்படும் இலவசங்களை பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் குஜராத், இமாச்சலப் பிரதேசம் தேர்தலை தொடர்ந்து திரிபுராவிலும் பாஜக இலவச வாக்குறுதிகளை வாரி இரைத்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.