சென்னை ஆலந்தூரை அடுத்த பழவந்தாங்கல் கண்ணன் காலணியைச் சேர்ந்தவர் விஜயன் (32) இவர், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 5 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று உள்ளது. காவலர் விஜயனின் உறவினர் வாசுதேவன். இவரின் நண்பர் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த அஜ்மீர் காஜா. இவர்கள் இருவரும் தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகின்றனர். கடந்த 6.2.2023-ம் தேதி வாசுதேவனும் அவரின் அக்காள் கணவருமான காவலர் விஜயனும் காய்கறி வாங்க பைக்கில் சென்றனர். அப்போது, வாசுதேவனுக்கு போன் செய்த அஜ்மீர் காஜா, தன்னை பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே உள்ள நோபல் தெருவில் வைத்து சிலர் அடித்து துன்புறுத்துகிறார்கள். உடனே வந்து தன்னைக் காப்பாற்று என்று வாசுதேவனிடம் பதற்றுத்துடன் கூறியிருக்கிறார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வாசுதேவன், விவரத்தை காவலர் விஜயனிடம் கூறினார். பின்னர் இருவரும் அஜ்மீர்காஜாவைக் காப்பாற்ற அங்குச் சென்றனர். அப்போது நடந்த மோதலில் காவலர் விஜயன் காயமடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து புனித தோமையார் மலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லப்பா 147, 341,294(b), 323,324, 506(11) 307 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பெற்றுவந்த காவலர் விஜயன், நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கண்ணன் காலணியைச் சேர்ந்த ரவிக்குமார் (28) விவேக் (28 ) வினோத் குமார் (32 )அஜித் (26) ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்னும் சிலரை போலீஸார் தேடிவருகிறார்கள்.
சம்பவம் எப்படி நடந்தது என்று கொலை செய்யப்பட்ட காவலர் விஜயனின் உறவினர் வாசுதேவன், இன்ஸ்பெக்டர் செல்லப்பாவிடம் கண்ணீர்மல்க தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தாலுகா பிரமதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் சென்னை ஆலந்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு சகோதரிகள். அதில் ஒரு சகோதரியைத்தான் காவலர் விஜயன் திருமணம் செய்திருக்கிறார். கடந்த 6.2.2023-ம் தேதி வாசுதேவனும் காவலர் விஜயனும் காய்கறி வாங்க பைக்கில் சென்றிருக்கிறார்கள். அப்போது வாசுதேவனின் நண்பர் அஜ்மீர்காஜா போனில் கூறிய தகவலையடுத்து இருவரும் அஜ்மீர்காஜாவைக் காப்பாற்ற அங்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது ஆலந்தூர் கண்ணன் காலணியைச் சேர்ந்த அஜீத் அலி என்கிற மணிகண்டன், ரவிக்குமார், வினோத்குமார், விவேக் ஆகியோர் அஜ்மீர் காஜாவை தாக்கியிருக்கிறார்கள்.

அதைப்பார்த்த காவலர் விஜயன், அவர்களிடம், `அடிக்காதீங்க. நானும் போலீஸ்தான் என்ன பிரச்னைன்னு என்னிடம் சொல்லுங்க’ என்று சமரசமாக பேசியிருக்கிறார். அப்போது ரவிக்குமார் என்பவர் காவலர் விஜயனை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, `போலீஸ்ன்னா…நீ பெரிய ஆளா..’ என திட்டிக் கொண்டே அஜித்திடம் விஜயனின் காலை உடைக்கும்படி கூறியிருக்கிறார். உடனே அஜித்தும் காவலர் விஜயனை எட்டி உதைத்திருக்கிறார். இதில் அவர் கீழே விழுந்தார். அதைப்பார்த்த வாசுதேவன், விஜயனை காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். அப்போது அங்கு வந்த மற்றவர்கள் கற்களைக் கொண்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். அதனால் விஜயன், வாசுதேவன், அஜ்மீர் காஜா ஆகியோர் தப்பி ஓட முயன்றனர். அப்போதுதான் அந்தக் கும்பல் வீசிய ஒரு கல், காவலர் விஜயனின் தலையில் பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. அதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து சுயநினைவை இழந்திருக்கிறார். இதையடுத்து பொதுமக்கள் உதவியோடு காவலர் விஜயனை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் வாசுதேவன். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜயன் உயிரிழந்து விட்டார். கைதானவர்கள் மதுபோதையில் இருந்திருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.
போலீஸாரிடம் நடந்த சம்பவத்தை வாசுதேவன் கண்ணீர்மல்க சொல்லிக் கொண்டிருக்கும்போதே திடீரென அவர், நண்பனைக் காப்பாற்ற சென்ற இடத்தில் மாமாவை இழந்துட்டேனே என கதறி துடித்திருக்கிறார். உடனே அருகிலிருந்த போலீஸாரும் உறவினர்களும் ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.