ராஜஸ்தான்: சட்டப்பேரவை தேர்தலையொட்டி பட்ஜெட்டில் அறிவிப்புகளை அள்ளித் தெளித்த காங்கிரஸ்!

`மாதம் 100 யூனிட் வரை இலவச மின்சாரம், ஆய்வுப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை நிதி உதவி, ஜெய்ப்பூரில் ராஜீவ் காந்தி பெயரில் விமானத்துறை பல்கலைக்கழகம்’ உள்பட ஏராளமான அறிவிப்புகள் ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் ராஜஸ்தான் மாநில முதல்வரும், நிதி துறையை தன் கைவசம் வைத்துள்ளவருமான அசோக் கெலாட் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வீட்டு உபயோகத்திற்கான இலவச மின்சாரம் முன்பு ஐம்பது யூனிட்டுகள் இருந்த நிலையில், தற்போது அதை 100 யூனிட்டுக்களாக அதிகரித்தும், மாநில அரசின் காப்பீடு திட்டத்திற்கான அளவு 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தியும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு வழங்கப்படுமென குறைத்தும் அவர் அறிவித்தார்.
இளைஞர்களை கவரும் வகையில் போட்டி தேர்வுகளுக்கு ஒரு முறை பணம் கட்டினால் போதும், ஜோத்பூரில் புதிய மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மாநிலம் முழுவதும் மூன்று புதிய இடங்களில் மருத்துவக் கல்லூரி, ஜெய்ப்பூரில் ராஜீவ் காந்தி பெயரில் விமான துறை பல்கலைக்கழகம் ஆய்வு படிப்புகள் மேற்கொள்பவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிதி உதவி, இளைஞர்களுக்கு திறன் வழங்கும் வகையில் ரூபாய் 500 கோடிக்கு புதிய திட்டம், 75 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அனுமதி, மாணவிகளுக்கு இலவச எலக்ட்ரிக் இருசக்கர வாகனம், பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் இலவச கல்வி என பல அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
image
விபத்து காப்பீடு ஐந்து லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்வு, தையல் எந்திரங்களை வாங்க பெண்களுக்கு 5000 ரூபாய், ராஜஸ்தான் முழுவதும் 30,000 தூய்மை பணியாளர்கள், பெண்கள் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது டிக்கெட்டில் பாதி விலை, 2000 யூனிட்டுகள் வரை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என மற்ற பிற திட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார். முன்னதாக பட்ஜெட் தாக்கலின்போது, முதல்வர் அசோக் கெலாட் தவறுதலாக சுமார் 8 நிமிடங்கள் கடந்த ஆண்டு பட்ஜெட்டையே வாசித்தார்.
இதையடுத்து தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டி, அசோக் கெலாட் பட்ஜெட் வாசிப்பதை நிறுத்தினார். எனினும், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அவையில் கூச்சல் போட்டு அமளியில் ஈடுபடத்தொடங்கினர். இதன் காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான வசுந்தராஜே பேசுகையில், “நான் முதல்வராக இருந்த போது பட்ஜெட் வாசிப்பதற்கு முன்பாக முழுமையாக சரிபார்த்துக் கொள்வேன். கடந்த பட்ஜெட்டை மீண்டும் வாசிக்கும் முதல்வரின் கையில் மாநிலம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் அசோக் கெலாட், “உங்கள் கையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்ஜெட்டின் நகலில் இருந்து என்னிடம் இருக்கும் பட்ஜெட் உரையில் வேறுபாடு இருந்தால் என்னிடம் சுட்டிக்காட்டுங்கள். பட்ஜெட் உரை கசிந்து விட்டதாக எப்படி சொல்ல முடியும்? தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்த பக்கங்கள் சேர்க்கப்பட்டு விட்டது” என்று விளக்கம் அளித்தார்.

Rajasthan CM Ashok Gehlot, who also holds the Finance portfolio, while presenting this year’s budget, starts reading an old one. The Chief Whip had to step in and stop him. Embarrassing as it is, also shows how callous and poorly invested Congress is, in matters of governance… pic.twitter.com/I6a4RnqcKr
— Amit Malviya (@amitmalviya) February 10, 2023

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.