விண்ணில் சீறிப்பாய்ந்தது இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி – டி2 ராக்கெட்.. வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள்கள்!!

ஸ்ரீஹரிகோட்டா: சிறிய வகை செயற்கைகோள்களை சுமந்து செல்லும் இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி. டி 2 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. டி 2 ரக ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் , சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-டி1 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்  வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தாலும்,   திடீரென  ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, செயற்கைகோள்களை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்தமுடியாமல் போனது.

இதனையடுத்து இஸ்ரோ வடிவமைத்துள்ள மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி.டி2 ரக ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.  34 மீட்டர் உயரமும் 2 மீட்டர் விட்டமும் கொண்டதாக சிறிய அளவில் வடிவமைக்கப்பட்ட எஸ்எஸ்எல்சி ராக்கெட், மொத்தம்  334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.  இந்த ராக்கெட்டில்  பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07,  அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனத்தின் 22.7 கிலோ எடை கொண்ட  ஜானஸ் -1 செயற்கை கோள்,  சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஆசாதி சாட்- 2  செயற்கை கோள் உள்ளன.

பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கிலோ மீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் இந்த   செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.  மொத்தம் 900 வினாடிகள் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டின் பயணத்தில்,  முதலாவது இஓஎஸ்-07  சாட்டிலைட்  13 வது நிமிடத்தில் அதன் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 15 நிமிடங்களுக்குள்ளான 3 செயற்கை கோள்களும் நிலைநிறுத்தப்பட்டதால், எஸ்.எஸ்.எல்.வி -டி2 ராக்கெட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 30 நிமிடங்களில் இந்த செயற்கைகோள்கள் கட்டுபாட்டு அறையுடன் தொடர்பை ஏற்படுத்தி செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.