மும்பை: அதிவேகமாக செல்லும் மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மும்பை – சோலாப்பூர், மும்பை – சாய்நகர் ஷிர்டி ஆகிய ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து பிரதமர் தொடங்கி வைத்தார்.வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடி பிரதமர் மோடி மகிழ்ந்தார்.இந்நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மும்பை – சோலாப்பூர் வந்தே பாரத் ரயில், நாட்டின் 9-வது வந்தே பாரத் ரயிலாகும். புதிய உலகத்தரம் வாய்ந்த ரயில், மும்பை-சோலாப்பூர் இடையே போக்குவரத்தை மேம்படுத்துவதுடன் சோலாப்பூரில் சித்தேஸ்வர், சோலாப்பூர் அருகே அக்கல்கோட், துல்ஜாபுர், புனே அருகே ஆலந்தி ஆகிய முக்கியமான யாத்திரை மையங்களுக்கு பயணிக்க முடியும்.மும்பை-சாய்நாதர் ஷிர்டி வந்தே பாரத் ரயில், நாட்டின் 10-வது வந்தே பாரத் ரயிலாகும். இது மகாராஷ்ட்ராவில், நாசிக், திரிம்பகேஸ்வர், சாய்நகர் ஷிர்டி, ஷனி சிங்கனாப்பூர் ஆகிய முக்கிய யாத்திரை மையங்களின் போக்குவரத்தை இணைக்கும்.
இதைத் தொடர்ந்து மும்பையில் சாலைப் போக்குவரத்தின் நெரிசலைக் குறைப்பதற்காகவும், வாகனங்கள் நெரிசல் இன்றி, செல்லும் வகையில், சாந்தாக்ரூஸ் – செம்பூர் இணைப்புச் சாலை மற்றும் குரார் சுரங்கப் பாதையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் மும்பை மரோலில் அல்ஜாமீயா-துஸ்-சைஃபியாவின் புது வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அல்ஜாமீயா-துஸ்-சைஃபியா என்பது தாவூதி போரா சமுதாயத்தினரின் முதன்மையான கல்வி நிறுவனமாகும். சையத்னா முஃபதல் சைஃபுதீன் வழிகாட்டுதலின்படி அச்சமுதாயத்தினரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில், இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.