அதானி விவகாரம் | வலிமையும் சுதந்திரமும் கொண்ட நிதி கண்காணிப்பு அமைப்புகள் ஆய்வு: நிர்மலா சீதாராமன்

மும்பை: அதானி குழுத்தின் மீதான நிதி முறைகேடு புகார் குறித்து இந்திய நிதி கண்காணிப்பு அமைப்புகள் ஆராய்ந்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், பட்ஜெட் குறித்து ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் கூட்டத்தில் விவரித்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம்: ”அதானி குழுமம் மீதான புகார் தொடர்பாக நமது நாட்டின் நிதி கண்காணிப்பு அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றன. அவர்கள் தங்கள் பணியை தொடங்கிவிட்டார்கள்.

அமைப்பு ரீதியான வலிமையும் திறமையும் கொண்டவை நமது நிதி கண்காணிப்பு அமைப்புகள். இதுபோன்ற விவகாரங்களை கையாளும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் சுதந்திரமாக இயங்கக்கூடியவர்கள். இப்போது மட்டுமல்ல; எப்போதுமே அவர்கள் சுதந்திரமாகவே இயங்கி வருகிறார்கள்.

புதிய வருமான வரி திட்டம் இந்த பட்ஜெட்டின் மிக முக்கிய அம்சம். இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு அதிக பணம் மிச்சமாகும். டிஜிட்டல் கரன்சியான கிரிப்டோகரன்சி 99 சதவீதம் தொழில்நுட்பத்துடன் இணைந்தது. இதற்கு பொதுவான ஒழுங்குமுறை விதிகள் உருவாக்கப்பட வேண்டும். அந்த விதிமுறைகள் அனைத்து நாடுகளாலும் ஏற்கத்தக்க அளவில் தரமானதாக இருக்க வேண்டும். இது தொடர்பாக ஜி20 நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிதி கண்காணிப்பு அமைப்புகள்: இந்தியாவில் ரிசர்வ் வங்கி (RBI), செபி (SEBI), ஐஆர்டிஏஐ (IRDAI), கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் (MCA) ஆகியவை நிதி கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளக்கூடியவை.

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இதனிடையே, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பொய்யானது என்றும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டது என்றும் அதானி குழுமம் விளக்கம் அளித்திருந்தது.

அதேவேளையில், அதானி குழுமத்தில் பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி பெருமளவில் முதலீடு செய்துள்ளது. அதேபோல் அக்குழுமத்துக்கு பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ ரூ.21,000 கோடி கடன் வழங்கியுள்ளது. முறைகேடு புகார் காரணமாக தற்போது அதானி குழுமம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், எல்ஐசி மற்றும் எஸ்பிஐயின் பங்கு மதிப்புகள் சரிந்துள்ளன. இதன் எதிரொலியாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.