புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் போன்று இந்தியா தனக்கும் சொந்தமானது என்று ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மஹ்மூத் மதானி கூறியுள்ளார். தலைநகர் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஜாமியத் உலமா-இ-ஹிந்தின் நிறைவுக் கூட்டத்தில் பேசுகையில் மௌலானா மதானி இவ்வாறு தெரிவித்தார். இந்தியா நம் அனைவருக்குமான நாடு என்றும், இந்த நாடு நரேந்திர மோடி மற்றும் மோகன் பகவத் ஆகியோருக்கு எந்த அளவு சொந்தமானதோ, அதே அளவு மஹ்மூத் மதானிக்கும் சொந்தமானது என்றும் அவர் தெரிவித்தார்.
‘மஹ்மூத் அவர்களை விட ஒரு அங்குலம் முன்னால் இல்லை, அவர்களும் மஹ்மூதை விட ஒரு அங்குலம் முன்னால் இல்லை’ என்றார் மஹ்மூத் மதானி.
அவர் மேலும் கூறுகையில், இந்நாட்டின் பழமையான மதம் இஸ்லாம் என்று தெரிவித்தார். “இந்த நிலம் முஸ்லீம்களின் முதல் தாயகம். இஸ்லாம் வெளியில் இருந்து வந்த மதம் என்று சொல்வது முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படையற்றது. அனைத்து மதங்களிலும் இஸ்லாம் மிகவும் பழமையான மதம். இந்தி முஸ்லிம்களுக்கு இந்தியா சிறந்த நாடு” என்று மதானி கூறினார்.
தாங்கள் கட்டாய மத மாற்றங்களுக்கு எதிரானவர்கள் என்று கூறிய ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர், இன்று தானாக முன்வந்து மதம் மாறுபவர்களும் பொய் வழக்குகளில் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள் என்று கூறினார்.
‘வலுக்கட்டாயமாக நடத்தப்படும் மத மாற்றத்திற்கு நாங்கள் எதிரானவர்கள். மத சுதந்திரம் அடிப்படை உரிமை. பலாத்காரம், மோசடி, பேராசை ஆகியவற்றைக் கொண்டு மதமாற்றம் செய்வதற்கும் நாங்கள் எதிரானவர்கள். நமாஸ் மீதான தடை போன்ற நடவடிக்கைகளால் ஏஜென்சிகள் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்ததற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஜாமியத் உலமா-இ-ஹிந்தின் மூன்று நாள் முழு அமர்வு தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
யூனிஃபார்ம் சிவில் சட்டம், மத சுதந்திரம் மற்றும் முஸ்லீம் தனிநபர் சட்டம் மற்றும் மதரஸாக்களின் சுயாட்சி ஆகியவை மாநாட்டில் விவாதிக்கப்படும் சில விஷயங்களில் அடங்கும் என ஜாமியத் உலமா-இ-ஹிந்த் கூறியுள்ளது. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான முன்மொழிவும் கொண்டு வரப்படக்கூடும்.
ஜாமியத்தின் 34வது அமர்வில், மத சகோதரத்துவத்தை வலுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களைத் தடுப்பதற்கான முயற்சிகளும் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.
ஜாமியத் உலமா-இ-ஹிந்த் என்பது ஒரு நூற்றாண்டு பழமையான அமைப்பாகும். முஸ்லிம்களின் சிவில், மத, கலாச்சார மற்றும் கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இது செயல்படுகிறது. ஜாமியத் முஸ்லிம்களின் மிகப்பெரிய அமைப்பாகக் கருதப்படுகின்றது.