ஈரோடு இடைத்தேர்தல் | ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிப்.19-ல் கமல்ஹாசன் பிரச்சாரம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து களமிறங்கியுள்ளது. இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வரும் 19ஆம் தேதி மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்கிறார். இது தொடர்பான பயண விவரக் குறிப்பை மக்கள் நீதி மய்யக் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 19.02.2023 அன்று மாலை 5 மணிக்கு கருங்கல்பாளையம் காந்தி சிலையில் அவர் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு சூரம்பட்டி நால்ரோடு, மாலை 6 மணியளவில் சம்பத் நகர், மாலை 6.30 மணிக்கு வீரப்பன்சத்திரம் பிரச்சாரம் செய்கிறார். இறுதியாக மாலை 7 மணியளவில் ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் அவர் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல்ஹாசனை நேரில் சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த , “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற எனக்கு அவர் ஆதரவு தரவேண்டும். திமுக கூட்டணியில் அவர் சேர வேண்டும் என்ற எங்களுடைய விருப்பத்தை அவரிடம் கூறினேன். கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக அவர் கூறினார்.

உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், கமல்ஹாசனின் ரத்தத்தில், தேசியமும் காங்கிரஸும் கலந்திருப்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய தந்தை காங்கிரஸ் கட்சியில் தியாகியாக இருந்தவர். மறைந்த தலைவர் காமராஜருக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தவர்.எனவே, காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்பதுதான் உண்மை. இருப்பினும் அவர் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டோம். நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக கூறியுள்ளார். ஒரு நல்ல முடிவை அறிவிப்பார். அதோடு மட்டுமின்றி, அவர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம். கண்டிப்பாக அதை அவர் செய்வார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்று அவர் கூறியிருந்தார்.

இதனையடுத்து ஜனவரி 25ல் மநீம செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வெற்றிக்கு நானும், எனது கட்சியும் வேண்டிய உதவிகளை செய்வோம். வாக்காளர்கள் அனைவரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.