
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ” எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் பரப்புரை என்ற பெயரில் பச்சை பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகளை நன்றாக உணர்ந்த நிலையில் தோல்வி பயந்ததால் இபிஎஸ் பச்சை பொய்களையும் புரட்டுகளையும் மக்கள் மனதில் விதைக்க முயன்றுள்ளார்.
எம்ஜிஆர்,ஜெயலலிதா காப்பாற்றி வலிமை படுத்திய அதிமுகவை அடிமை சாசனமாக பாஜகவிற்கு இபிஎஸ் எழுதி கொடுத்துவிட்டார். தமிழகத்தின் நலனுக்கு எதிரான நீட் தேர்வு, புதைவட மின்திட்டம், காவிரி பிரச்சினை அதில் மேகதாது விவகாரம் போன்றவை எதிர்த்த நிலையில் இதற்கு அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்தார். மூன்று வேளாண் சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை ஆதரித்தவர் எடப்பாடி பழனிசாமி.

ஊழலை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவது யோக்கியவன் வருகிறான் சொம்பு எடுத்து உள்ளே வை என்பதுபோல் உள்ளது. இபிஎஸ்-க்கு எவ்வித தகுதியும் இல்லை. இபிஎஸ் ஆட்சியில் நிகழ்ந்த கலெக்ஷன்,கரப்பசன், கமிஷன் செயலால் தான் அதிமுக ஆட்சி வீட்டிற்கு அனுப்பட்டது. நெடுஞ்சாலை துறையில் புதிய ஒப்பந்தம் மற்றும் தனியார் தாரை வார்க்கப்பட்டது எல்லாம் மக்களுக்கு தெரியும். சட்ட ஒழுங்கு திமுக ஆட்சியில் சீர் தூக்கிய நிலையில் நடைபெற்று வருகிறது.
ஊழலின் மொத்த உறைவிடமாகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்த முதன்மை இடத்திலும் அதிமுக உள்ளது. இதனால் அதிமுக எடப்பாடி பழனிசாமி எத்தனை முகமூடிகளை அணிந்து கொண்டு மக்களிடம் சென்றாலும் இந்த இடைத்தேர்தலில் அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் மறைவது உறுதி.
அதிமுகவிற்கு தக்க பாடம் இடைத்தேர்தல் புகட்டும்” என தெரிவித்தார்.