புதுடெல்லி: ஊழலை பற்றி பேசும் காங்கிரஸ் எம்பிக்களே உங்களது வாயை டெட்டால் கொண்டு சுத்தம் செய்யுங்கள் என்று அவையில் நிர்மலா சீதாராமன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் எம்பிக்களின் கேள்விகளுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். நேற்றைய விவாதத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், ‘அண்ணே… காங்கிரஸ்காரர்களே! ஊழலை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். உங்கள் வாயை டெட்டாலை கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
ஊழலைப் பற்றி நீங்களா பேசுவது? ’ என்று கிண்டலடிக்கும் வகையில் ஆவேசமாக பேசினார். இவரது பேச்சை கேட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், ‘இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், அங்கு டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி (வாட்) உயர்த்தப்பட்டது. இதுதான் காங்கிரஸின் கலாசாரம். அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள்; பின்னர் அவையை விட்டு வெளிநடப்பு செய்வார்கள்; ஆனால் என்ன சொல்கிறோம் என்பதை கேட்க மாட்டார்கள். அதேபோல் ஆம்ஆத்மி ஆளும் பஞ்சாப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது’ என்றார்.