‘தமிழகத்தில் விரைவில் காகிதம் இல்லா நீதிமன்றம்’ – நீதிபதி ஆர்.மகாதேவன் தகவல்

மதுரை: ‘தமிழக நீதிமன்றங்களில் காகிதம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்வது, காகிதம் இல்லாமல் வழக்குகளை விசாரிப்பதற்கான முயற்சிகளும், முன்னெடுப்புகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.

மதுரையில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநில மாநாடு, உலக தமிழ்ச்சங்க அரங்கில் இன்று நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது: “உலகம் முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதற்கு வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

தற்போது காகிதம் இல்லாமல் நீதிமன்றம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெரியளவில் வளராத ஜாம்பியா நாட்டில் காகிதம் இல்லாத நீதிமன்ற திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நீதிமன்றங்களில் காகிதம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்வது, காகிதம் இல்லாமல் வழக்குகளை விசாரிப்பதற்கான முயற்சிகளும், முன்னெடுப்புகளும் நடைபெற்று வருகின்றன. இதற்காக அறிவியல், விஞ்ஞான வளர்ச்சியை எந்தளவுக்கு பயன்படுத்த முடியுமோ, அந்த அளவிற்கு வழக்கறிஞர்கள் ஆர்வமாக செயல்பட வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாநாடு வரவேற்பு குழு தலைவர் ஜெ.அழகுராம்ஜோதி வரவேற்றார். தேசிய துணைத் தலைவர் ஆர்.ராஜேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் கே.பழனிகுமார் ஆகியோர் பேசினர். வரவேற்புக்குழு குழு செயலாளர் பி.ராஜேஷ் சரவணன் நன்றி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.