சேலம் மண்டலம் புவியியல் மற்றும் கனிமவளத் துறையில் பறக்கும் படை ஆய்வாளராக பிரியா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் ஊதியூர் பகுதியில் கிராவல் மண் கடத்தல் தொடர்பாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் புங்கந்துறை கிராமத்தில் பிரியா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது அவ்வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி 3 யூனிட் கிராவல் மண் இருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
அதற்கு டிப்பர் லாரி ஓட்டுநர் ராசு மற்றும் ஜேசிபி ஆபரேட்டர் அன்பரசு ஆகியோர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை கட்டாயம் காவல் நிலையத்திற்கு வாகனங்களை கொண்டு செல்ல வேண்டும் என பிரியா வற்புறுத்தியுள்ளார். இதனால் பிரியா மீது லாரியை ஏற்றி கொள்ள முயற்சித்துள்ளனர். இதில் புவியியல் மற்றும் கனிம வள ஆய்வாளர் பிரியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனை அடுத்து லாரி ஓட்டுனர் ராசு மற்றும் ஜேசிபி ஆபரேட்டர் அன்பரசன் ஆகியோர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் பிரியா அளித்த புகாரின் பேரில் தப்பியோடிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.