தொட்டியில் விழுந்த மகன்: காப்பாற்ற முயன்ற தந்தை பலி; தீயணைப்பு வீரர்கள் விஷவாயு தாக்கி மயக்கம்!

​திண்டுக்கல், மலைக்கோட்டை அடிவாரத்தில் ​பத்திரகாளியம்மன் கோயில், ஐயப்பன் கோயில் இருக்கின்றன. அதனருகே கோட்டை குள​த்தை ஒட்டி முளைப்பாரி, தீச்சட்டி ஆகியவற்றை கரைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தண்ணீர் தொட்டியில் குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது என சொல்லப்படுகிறது.​ ​விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை இங்கு கரைப்பது வழக்கம். இதனால் இந்தத் தொட்டியில் 6 அடி ஆழத்துக்கு கழிவுகள் தேங்கியிருந்தது. 

கோயில் பகுதியில் குவிந்த மக்கள்

​இந்த நிலையில், திண்டுக்கல் ​பாறைமேடு பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் தன் மனைவி முத்துமாரி, மகன் லிங்கேஸ்வரன் ஆகியோருடன் கோட்டைக்குளம் பகுதிக்கு வந்திருக்கிறார். அப்போது முளைப்பாரி கரைக்கும் தொட்டிக்கு அருகேச் சென்று விளையாடி கொண்டிருந்த லிங்கேஸ்வரன் தடுமாறி தொட்டிக்குள் விழுந்துவிட்டார். இதைப் பார்த்த வெற்றிவேல் மகனை காப்பாற்ற தொட்டிக்குள் குத்தித்திருக்கிறார். வெல்டிங் தொழிலாளியான வெற்றிவேல் விபத்தில் இடது கையை இழந்தவர். இதனால் மகனை மீட்க முடியாமல் கழிவுகளுக்கிடையே மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். முத்துமாரி அலறி துடித்து கூச்சலிட்டிருக்கிறார். அருகே இருந்தவர்கள் வந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். 

​திண்டுக்கல் தீயணைப்பு​ நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு​த் துறையினர் விரைந்து வந்து இருவரையும் காப்பாற்ற முயன்ற​னர். அப்​போது ​தொட்டிக்குள் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ​தீயணைப்புத் துறையைச் சேர்ந்த ராஜ்குமார், கார்த்திகேயன், சுரேஷ் ஆகிய மூன்று பேரையும் விஷவாயு தாக்கியதாக சொல்லப்படுகிறது.

விபத்து

​இதையடுத்து, ஐந்து பேரையும் தொட்டியிலிருந்து தீயணைப்புத் துறையினர் ​போராடி ​மீட்டனர். இதில் சிறுவனின் தந்தை வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிறுவன் லிங்கேஸ்​​வரன் உட்பட தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மூன்று பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர், நகர் நல அலுவலர், அலுவலர்கள் அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அதோடு, அந்த பகுதிக்குள் செல்ல கூடாது என கயிறு கட்டி சென்றிருக்கின்றனர்​.​ கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் இருந்து, கொண்டு வரப்படும் முளைப்பாரி, அக்னி சட்டிகள் இந்த தொட்டியில் கொட்டுவதால் தற்போது விஷ வாயு உற்பத்தியாகும் இடமாக மாறியிருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மேயர் ஆய்வு

​மேலும் சிகிச்சையில் உள்ள தீயணைப்புத் துறையினரை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி​, அதிகாரிகள் கோட்டை கேணி பகுதியினை நேரில் சென்று பார்வையிட்ட​னர். அந்தப் பகுதியை​ முறையாக சுத்தம் செய்து, தொட்டியைச் சுற்றி தடுப்பு அமைக்க வேண்டும் ஆகிய பாதுகாப்பு​க்கு​ ஏற்பாடுக​ள் செய்யப்பட்டன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.