புதுடில்லி: ‘அதானி குழுமம் குறித்த, ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, உள்நாட்டு முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்க, பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்துவதற்கான வலுவான வழிமுறைகளை உருவாக்குவது அவசியம்’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இது தொடர்பாக மத்திய அரசு, ‘செபி’ உள்ளிட்ட அமைப்புகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம், அதானி குழுமங்கள் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதையடுத்து, பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்தால் அரசியலிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பெரும் நஷ்டம்
இந்நிலையில், ‘அதானி குழுமம் குறித்து, ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை, இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும், இந்த அறிக்கை, இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.’எனவே, இந்த அறிக்கை தொடர்பான விசாரணையை மேற்கொள்ள, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்’ என, வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு முன்னதாக, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நேதன் ஆண்டர்சனும், அவரைச் சேர்ந்தவர்களும், ‘ஷார்ட் செல்லிங்’ எனும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள், அதானி குழுமத்தின் பங்கு மதிப்பை செயற்கையாக சீர்குலைத்து, இதன் வாயிலாக அதிக லாபம் அடைந்துள்ளனர். இதை இவர்கள் உள்நோக்கத்துடன் செய்துள்ளனர்.இதன் வாயிலாக, அப்பாவி முதலீட்டாளர்களையும், இந்திய பங்குச் சந்தையையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.
இதற்காகவே இவர்கள் திட்டமிட்டு, அதானி குழுமத்துக்கு எதிரான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதை செய்துள்ள நேதன் ஆண்டர்சன் மீது, மோசடி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த இரு பொதுநல மனுக்களும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த விவகாரம் குறித்த நாம் சில விஷயங்களை வெளிப்படையாக பேச வேண்டி இருக்கிறது. உள்நாட்டு முதலீட்டாளர்களின் பாதுகாப்பை நாம் எப்படி உறுதி செய்யப்போகிறோம் என்ற கவலை எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில், ‘ஷார்ட் செல்லிங்’ எனப்படும், செயற்கையான முறையில் பங்குகளை வீழ்ச்சி அடையச் செய்யும் மோசடி நடந்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 10 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான மதிப்பீடு
முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்படுவதையும், எதிர்காலத்தில் இதுபோல மீண்டும் நடக்காமல் இருப்பதையும் நாம் எப்படி உறுதி செய்வது? இதில், ‘செபி’ எனப்படும், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் பங்காக நாம் எதிர்பார்ப்பது என்ன? துறைசார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை உருவாக்குதல், முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்கான வலுவான வழிமுறைகளை ஏற்படுத்துதல் அவசியம் என கருதுகிறோம்.தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பின் சரியான மதிப்பீடு, முதலீட்டாளர்களின் நலன் மற்றும் பங்குச் சந்தையின் நிலையான செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டி உள்ளது.குழு அமைப்பதற்கான பரிந்துரையை மத்திய அரசும், செபி உள்ளிட்ட அமைப்புகளும் ஏற்றுக் கொண்டால், அது தொடர்பான தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்