வில்லனாக மாறிய புரோட்டா… 16 வயது மாணவி பலி – காரணம் என்ன?

கேரளாவின் இடிக்கி மாவட்டத்தில் உள்ள வாழத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிஜூ கேப்ரியல். இவரது 16 வயது மகள் நயன்மரியா. வாழத்தோப்பு பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த இவர், புரோட்டா சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாம்மை (Allergy) காரணமாக இடிக்கி அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், நயன்மரியா சிகிச்சை பலனின்றி நேற்று (பிப். 10) உயிரிழந்தார். இவருக்கு மைதா மற்றும் கோதுமையினால் செய்யப்பட்ட உணவுகளில் ஒவ்வாமை இருந்துள்ளது. இதனால், அவர் அதற்கென்று சிகிச்சை பெற்றுள்ளார். தனக்கு ஓரளவு அந்த பிரச்னை நீங்கிவிட்டதாக எண்ணி, அவர் புரோட்டா சாப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு சென்று, வேன்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார். தொடர்ந்து,  சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கோதுமை ஒவ்வாமை என்றால் என்ன?

கோதுமை சேர்த்த உணவை உண்பதாலோ அல்லது கோதுமை மாவை நுகர்வதாலோ ஒருவருக்கு தீவிர ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படும். இதனை தவிர்க்க, கோதுமையை தவிர்ப்பதே ஒரே வழி. கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும், இதனை பின்பற்றுவது சற்று கடினம்தான். ஏனென்றால், சில பொருள்களில் மறைமுகமாக  கோதுமை சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் அறியாமையில் அதனை உட்கொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது. 

உதாரணத்திற்கு ஐஸ்கிரீம். இதில், கோதுமை இருப்பது பல பேருக்கு தெரியாது. மேலும், ஒருவேளை அலர்ஜி இருப்பவர்கள் கோதுமையை சாப்பிட்டுவிட்டால் உடனடியாக சில மருந்துகளை உட்கொள்ள வேண்டும். கோதுமை ஒவ்வாமை சில நேரங்களில் செலியாக் நோயுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த நிலைமைகள் வேறுபடுகின்றன. 

உங்கள் உடல் கோதுமையில் உள்ள புரதங்களுக்கு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் போது கோதுமை ஒவ்வாமை ஏற்படுகிறது. செலியாக் நோயில், கோதுமையில் உள்ள ஒரு குறிப்பிட்ட புரதம் – குளூட்டன் – இருப்பதால் ஒவ்வாமை ஏற்படுகிறது, இதுவே வேறுபாடாகும்.

கோதுமை ஒவ்வாமை கொண்ட ஒரு குழந்தை அல்லது வயது வந்தவருக்கு கோதுமை உள்ள ஏதாவது ஒன்றை சாப்பிட்ட சில நிமிடங்களில் சில மணிநேரங்களில் சில அறிகுறிகள் உருவாகலாம். கோதுமை ஒவ்வாமை அறிகுறிகள் பின்வருமாறு:

வாய் அல்லது தொண்டை வீக்கம், அரிப்பு அல்லது எரிச்சல்
படை நோய், அரிப்பு சொறி அல்லது தோல் வீக்கம்
மூக்கடைப்பு
தலைவலி
சுவாசிப்பதில் சிரமம்
பிடிப்புகள், குமட்டல் அல்லது வாந்தி
வயிற்றுப்போக்கு

உங்கள் பெற்றோருக்கு உணவு ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா போன்ற பிற ஒவ்வாமைகள் இருந்தால், கோதுமை அல்லது பிற உணவுகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. 

கோதுமை ஒவ்வாமை முதிர்ச்சியடையாத நோயெதிர்ப்பு மற்றும் செரிமான அமைப்புகளைக் கொண்ட குழந்தைகள், சிறுவர்களுக்கு மிகவும் பொதுவானது. பெரும்பாலான குழந்தைகள் 16 வயதிற்குள் கோதுமை ஒவ்வாமையை விட்டு வந்துவிட முடியும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.