புதுடெல்லி: இந்தியாவில் அவ்வப்போது ஏற்படும் சிறிய நிலஅதிர்வுகள் தான் பெரிய ஆபத்திலிருந்து பாதுகாப்பதாக நிபுணர்கள் கூறி உள்ளனர். துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், நூற்றாண்டில் இல்லாத பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டு கட்டு போல் சரிந்து, 30,000 மக்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, துருக்கியை தொடர்ந்து, அடுத்ததாக இந்தியா, பாகிஸ்தானை மையமாக கொண்டு பலமான நிலநடுக்கம் தாக்க வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பீதியை ஏற்படுத்தி உள்ளன.
இது குறித்து ஒன்றிய புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய நிலநடுக்கவியல் இயக்குநர் ஓ.பி.மிஸ்ரா கூறியிருப்பதாவது: மூன்று புவித்தட்டுகள் சந்திக்கும் புள்ளியே புவியியல் செயல்பாட்டின் முக்கியமான பகுதியாகும். இது மிகவும் கடினமானைவ, இறுக்கமானவை, அதிக அழுத்தத்தை தாங்கக் கூடியது. ஆனால் அதிக அழுத்தம் காரணமாக புவித்தட்டுகள் உடையும் போது, பூகம்பம் ஏற்படுகிறது. துருக்கியை பொறுத்த வரையில் 3 புவித்தட்டுகள் சந்திக்கும் 2 பகுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்றான, ஆப்பிரிக்கன் புவித்தட்டு, அரேபியன் புவித்தட்டு மற்றும் அந்தோலியன் புவித்தட்டு சந்திக்கும் பகுதிதான் உடைப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த பகுதியில் எந்த சிறிய அளவிலான நிலஅதிர்வுகளும் ஏற்படாமல் இருந்ததால் அழுத்தம் அதிகரித்து, அதிகரித்து ஒரே நேரத்தில் பயங்கரமாக வெளிப்பட்டுள்ளது. மேலும், புவித்தட்டு முழுமையாக உடைய அதிக நேரம் எடுத்ததால், அடுத்தடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, துருக்கியில் உள்ள கட்டிடங்கள் நிலஅதிர்வுகளை தாங்கக் கூடிய அளவிற்கு வலுவாக கட்டப்படவில்லை. முறையான விதிமுறைகள் பின்பற்றப்படாததால்தான் பல ஆயிரம் கட்டிடங்கள் சீட்டுக் கட்டு போல் சரிந்து பயங்கர பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.
ஆனால், இந்தியாவைப் பொறுத்த வரையில் நிலநடுக்க பாதிப்புள்ள பகுதியில் அமைந்திருந்தாலும் நிலைமைகள் வேறுவிதமாக உள்ளன. பாகிஸ்தான் உடனான எல்லைக்கு அருகில் இந்தியாவின் மேற்கு பகுதியில் 3 புவித்தட்டுகளின் சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் சிறிய அளவிலான நிலஅதிர்வுகள் தினமும் ஏற்பட்டு வருவது நமது அதிர்ஷ்டம். 4 மற்றும் 5 ரிக்டர் அளவிலான சிறிய நில அதிர்வுகளால் பூமியின் அழுத்தம் வெளியேறுகிறது. இதுவே பெரிய ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன. இதுமட்டுமின்றி, நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான துணை விதிகள் வகுப்பட்டு, மக்களும் அவற்றை பின்பற்றும் பட்சத்தில் பெரிய அளவிலான நிலநடுக்க பாதிப்புகளை குறைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
உள்துறை அமைச்சகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மேஜர் ஜெனரல் மனோஜ் குமார் பிண்டால் கூறுகையில், ‘‘இந்தியாவில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில அளவில் மாநில பேரிடர் மீட்பு படையினரும் என மீட்புப் பணிக்காக பயிற்சி பெற்ற அமைப்பு தயார் நிலையில் உள்ளது. எனவே எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள நாடு தயாராக இருக்கிறது. துருக்கியில் ஏற்பட்டது போல இமயமலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டாலும், பெரும் சேதம் ஏற்படும் என உறுதியாக கூற முடியாது’’ என்றார்.
* அசாமில் நிலஅதிர்வு
இதற்கிடையே, அசாமின் நாகோன் மாவட்டத்தில் நேற்று மாலை 4.15 மணி அளவில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால், உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.