பெங்களூரு: கர்நாடகா, மகாராஷ்டிரா, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் ஐஎஸ், அல்கய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 2 தினங்களாக கர்நாடகா,
மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 6 இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில் அல்கய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை பெங்களூருவில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர் பெயர் ஆரிஃப் (28) என தெரியவந்துள்ளது. முதல் கட்ட விசாரணையில் அவர் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியது தெரியவந்தது.
லேப்டாப், செல்போன், பறிமுதல்: சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ், அல்கய்தா ஆகிய அமைப்பினருடன் ஆரிஃப் தொடர்பில் இருந்துள்ளார். அந்த அமைப்புகளில் இணைந்து பணியாற்ற முயற்சித்ததாகவும், ஈரான் வழியாக சிரியாவுக்கு சென்று வந்ததாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. என்ஐஏ அதிகாரிகள் தனிசந்திராவில் அவர் தங்கி
யிருந்த அறையில் இருந்து லேப்டாப், 2 செல்போன், டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்தனர். பெங்களூரு மட்டுமல்லாமல் மும்பை, மங்களூரு, புனே உள்ளிட்ட 6 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் முக்கிய தகவல்களும், ஆவணங்களும் சிக்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.