கடலூர்: கடலூர் முதுநகர் ரயில் நிலையத்துக்கும் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள ரயில்வே கேட்டில், அழகர் செல்வம் என்பவர் நேற்று கேட் கீப்பராக பணியில் இருந்தார். அங்கு தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு இருந்ததை பார்த்த அவர் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அந்த நேரத்தில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயில், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றது. அதிகாரிகள் அந்த ரயிலை அங்கேயே நிறுத்தி வைத்தனர். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் விரிசல் ஏற்பட்ட இடத்துக்கு சென்று, அதனை தற்காலிகமாக சரி செய்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் ரயில்வே போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதன் பிறகு சுமார் அரை மணி நேரம் தாமதமாக அந்த பாசஞ்சர் ரயில் புறப்பட்டு சென்றது. இரவு நேரங்களில் அதிக பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெயிலும் அடிப்பதால், வெப்ப அழுத்தம் காரணமாக தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விரிசலை ரயில்வே ஊழியர் உடனடியாக பார்த்து தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
