திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் அருகே அரசலூர் கைகாட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்-அம்பிகா தம்பதியினர். இவர்களின் நான்கு வயது மகள் அனுஸ்ரீ. இவர் அதேபகுதியைச் சேர்ந்த சக குழந்தைகளுடன் விவசாய தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது விஷப்பூச்சி ஒன்று அனுஸ்ரீயை கடித்துள்ளது. இதனால், அந்த சிறுமி வழியால் கதறி உள்ளார். இதைப்பார்த்த சக குழந்தைகள் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த சிறுமி அழுதுகொண்டே பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்குள் சிறுமியின் உடலில் விஷம் ஏறியதால், பெற்றோர்கள் சிறுமியை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சிறுமியின் தாய் அம்பிகா தொட்டியம் போலீசில் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.