ஹைதராபாத்: தெலங்கானாவில் மேலவை தேர்தல் அறிவிப்பால் ஹைதராபாத்தில் 17-ம் தேதி நடைபெறவிருந்த தலைமைச் செயலக திறப்பு விழா, மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ரூ. 650 கோடி செலவில் பிரம்மாண்ட தலைமைச் செயலகத்தை மாநில அரசு கட்டி வருகிறது. ஹைதராபாத் ஹுசைன் சாகர் அருகே 64,989 சதுர அடியில், 11 அடுக்கு மாடி கட்டிடமாக, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, அதன் இறுதிக்கட்டப் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இக்கட்டிடத்திற்கு பி.ஆர். அம்பேத்கர் பெயரை மாநில அரசு சூட்டியுள்ளது.
இக்கட்டிடத்தின் திறப்பு விழா வரும் பிப்ரவரி 17-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு தமிழகம், டெல்லி, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களுக்கும், பல்வேறு முன்னாள் முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
திறப்பு விழா நெருங்கும் வேளையில் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் சட்டமேலவை தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் கடந்த 9-ம் தேதி அறிவித்தது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தலைமைச் செயலக திறப்பு விழாவை மறுதேதி குறிப்பிடாமல் தெலங்கானா அரசு தள்ளி வைத்துள்ளது.