நாட்டுக்கு அர்ப்பணிப்பு 246 கி.மீ விரைவுச் சாலை பிரதமர் மோடி திறந்தார்: டெல்லி-மும்பை திட்டத்தின் முதல் கட்ட பணிகள் நிறைவு

தவுசா: டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் திட்டத்தின் முதல் கட்டமாக டெல்லியில் இருந்து லால்சோட் வரை 246 கி.மீ தூரம் அமைக்கப்பட்டுள்ள சாலையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். டெல்லி – மும்பை விரைவுச் சாலையின் ஒரு பகுதியான 246 கிமீ தூரம் கொண்ட டெல்லி – தவுசா – லால்சோட்(ராஜஸ்தான்) விரைவு நெடுஞ்சாலையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் ரூ.5940 கோடி செலவில் 247 கிலோமீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.  

இக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, ‘‘ டெல்லி-மும்பை விரைவுச் நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததில் பெருமிதம் அடைகிறேன். இது உலகின் மிக முன்னேறிய விரைவுச் சாலைகளில் ஒன்றாகும். இதுபோன்ற நவீன சாலைகள், ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், மெட்ரோ மற்றும் விமான நிலையங்கள் அமைக்கப்படும்போது, நாட்டின் வளர்ச்சி வேகமடைகிறது.டெல்லி-தவுசா விரைவு சாலையால் அந்த பகுதியில் மிக பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும். தவுசாவில் இருந்து வேலைக்கு செல்பவர்கள் காலையில் டெல்லி சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி விடலாம். இதனால், சரிஸ்கா தேசிய பூங்கா,கியாலோதியோ தேசிய பூங்கா, ரந்தம்போர் தேசிய பூங்கா ஆகியவை மற்றும் சுற்றுலா துறை மேம்பாடு அடையும்’’ என்றார்.

பின்னர் தவுசாவில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது,‘‘ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கான எந்த தொலைநோக்கு திட்டங்களும் இல்லை. மாநில அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெறும் ஏட்டளவில் தான் இருக்கிறது. ஒன்றியத்தை போல் மாநிலத்திலும் பாஜ ஆட்சி அமைய வேண்டும். இரட்டை இன்ஜின் அரசு இருந்திருந்தால் மாநிலம் மிக பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது எல்லை புறங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. சாலைகள் அமைத்தால் எதிரி படைகள் எளிதில் உள்ளே புகுந்து விடுவார்கள் என்ற அச்சத்தில்தான் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர்.  

காங்கிரஸ் கட்சியினர் ராணுவத்தையும் வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தையும் எப்பொழுதுமே குறைத்து மதிப்பிடுகின்றனர். இந்திய எல்லைக்குள் நுழைய முயலும் எதிரி படைகளை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது இந்திய வீரர்களுக்கு தெரியும். கடந்த 9 ஆண்டுகளில் எல்லை பகுதிகளில் ஏராளமான சாலை, ரயில்வே கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது. இதுபோன்ற நிச்சயமற்ற தன்மையில் இருந்து விடுபட்டு நிலையான,வளர்ச்சி அடிப்படையிலான அரசு அமைய வேண்டும். ராஜஸ்தானின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் பாதுகாப்பதற்கு பாஜவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்’’ என்றார்.
    
* நாட்டிலேயே மிக நீளமான விரைவு நெடுஞ்சாலையான டெல்லி-மும்பை விரைவு நெடுஞ்சாலை ரூ.1லட்சம் கோடியில் அமைக்கப்படுகிறது
* டெல்லி- லால்சோட் விரைவு நெடுஞ்சாலை  ரூ.12,150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
* விரைவு நெடுஞ்சாலையின் மூலம் டெல்லி-ஜெய்ப்பூர் இடையே பயண நேரம் 5 மணி நேரத்தில் இருந்து மூன்றரை மணி நேரமாக குறைந்துள்ளது
* இந்த சாலை பணிகள் முழுவதும் முடிவடைந்தால் மும்பை -டெல்லி பயண நேரம் 24 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக குறையும்
* அதே போல் கோட்டா, ஜெய்ப்பூர்,இந்தூர், போபால்,வதோதரா,சூரத்  உள்ளிட்ட 12 முக்கிய நகரங்களும் விரைவு சாலையில் இணைக்கப்பட்டுள்ளது.
* டெல்லி, அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை இந்த சாலை இணைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.