குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்துக்குப் பதிலளித்து மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 90 முறை கலைத்தது. இந்திரா காந்தி மட்டுமே பிரிவு 356-ஐப் பயன்படுத்தி மாநில அரசுகளை 50 முறை கலைத்தார்.

மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால் கேரளாவில் இடதுசாரி அரசு கலைக்கப்பட்டது. ஆந்திராவில் என்.டி.ராமாராவ் அரசு கலைக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் சரத் பவார் ஆட்சி கலைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியும், கருணாநிதி ஆட்சியும் கலைக்கப்பட்டன. இவர்களெல்லாம் இப்போது காங்கிரஸ் கட்சியுடன் அமர்ந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
அதானிக்கும் மோடிக்குமான தொடர்பையும், மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருந்த காலத்தில் உலகின் 2-வது பணக்காரராக அதானி எப்படி உயர்ந்தார் என்பது பற்றியும், காங்கிரஸ் கட்சி பல கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியது. அந்தக் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல், அதற்கு சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றியே மக்களவையிலும் மாநிலங்களிலும் பிரதமர் மோடி பேசினார். அந்த வகையில்தான், மாநிலங்களவையில் பேசியபோது, காங்கிரஸ் ஆட்சியில் மாநில அரசுகள் கலைக்கப்பட்டது பற்றி அவர் குறிப்பிட்டார். ஆனாலும், வரலாற்று உண்மையைத்தான் மோடி பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இ.எம்.எஸ் தலைமையிலான ஆட்சியை, மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி கலைத்தது. சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, பிரிவு 356-ஐப் பயன்படுத்தி கலைக்கப்பட்டது என்றால், அது இ.எம்.எஸ் அரசுதான். இந்திரா காந்தி தலைமையிலான அரசால் நாடு முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றது.
முதல்வராக இருந்த கருணாநிதி, இந்திராவுக்கு எதிராக குரல் கொடுத்தார். கருணாநிதி ஆட்சி 1976-ம் ஆண்டு கலைக்கப்பட்டது. 1980-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டை ஆட்சிசெய்த அ.தி.மு.க., இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் தலைமையிலான ஆட்சிக் கலைக்கப்பட்டது.

1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்தது. ஜெயலலிதா தலைமையில் `ஜெ அணி’, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையில் `ஜா அணி’ என்ற இரண்டு அணிகள் செயல்பட்டன. ஜானகி தலைமையிலான அணி அதிகாரத்துக்கு வந்தது. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடைபெற்ற வன்முறை காரணமாக, 1988-ம் ஆண்டு ஜானகி தலைமையிலான ஆட்சிக் கலைக்கப்பட்டது.
ஒரு மாநில ஆட்சி, அரசியல் அமைப்புச் சட்டத்தின் அம்சங்களின் அடிப்படையில் செயல்படாத அல்லது செயல்பட இயலாத நிலையில் இருப்பதாக ஆளுநர் அறிக்கை அளித்தாலோ அல்லது வேறு வகையில் தெரியவந்தாலோ அந்த மாநிலத்தில் பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்யலாம். இந்தப் பிரிவை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தித்தான், எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் ஆட்சிக் கலைப்பில் மத்திய அரசு ஈடுபட்டுவந்தது.
பிரிவு 356-ன்படி, ஒரு மாநிலத்தில் ஆறு மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும். சில நேரங்களில் மூன்று ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம். அதற்கு, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதம் அதிகரித்துவருகிறது என்ற காரணத்தால், 1987 முதல் 1992 வரை குடியரசுத் தலைவரின் ஆட்சி அமலில் இருந்தது.

1959-ம் ஆண்டுவரை, ஜவஹர்லால் நேரு ஆட்சியில் ஆறு முறை பிரிவு 356 பயன்படுத்தப்பட்டது. 1960-களில் 11 முறை இந்தப் பிரிவு பயன்படுத்தப்பட்டது. 1966-ல் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்த பிறகு 1967 முதல் 1969 வரை மட்டுமே ஏழு முறை பிரிவு 356 பயன்படுத்தப்பட்டது. 1970 முதல் 1974 வரை 19 முறை பிரிவு 356 பயன்படுத்தப்பட்டது. 1992-ல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு, உ.பி-யில் இருந்த பா.ஜ.க அரசு கலைக்கப்பட்டது.
இந்த சம்பவங்களைத்தான் பிரதமர் மோடி குறிப்பிடுகிறார். காங்கிரஸ் ஆட்சியின்போது மாநில அரசுகள் கலைக்கப்பட்டது பற்றி பேசிய பிரதமர் மோடி, மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது மாநில அரசுகள் கலைக்கப்பட்டது பற்றி மட்டும் வசதியாக மறந்துவிட்டார். இந்திரா காந்தி அரசால் கொண்டுவரப்பட்ட அவசரநிலை காலம் முடிந்த பிறகு, மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த ஒன்பது மாநிலங்களில் அந்த அரசுகளை ஜனதா அரசு கலைத்தது. ஜனதா கட்சியில் இருந்தவர்கள்தான், அதிலிருந்து பிரிந்துவந்து பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பித்தனர்.

ஆகவே, அரசியல் பழிவாங்கலுக்காக மாநில அரசுகளை ஜனதா அரசு கலைத்ததில் பா.ஜ.க-வினருக்கும் பங்கு இருக்கிறது என்ற வாதமும் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது. அப்படியென்றால், காங்கிரஸ் செய்த ஆட்சிக்கவிழ்ப்பு வேலையை பிரதமர் மோடியின் முன்னோர்களும் செய்திருக்கிறார்கள். “பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகுதான், பிரிவு 356-ஐப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைக்கும் போக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியொரு தீர்ப்பு வரவில்லையென்றால், மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கும் தமிழ்நாட்டில் ஸ்டாலின் அரசுக்கும், கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கும், தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் அரசுக்கும் முடிவுகட்டும் நிலை ஏற்பட்டிருக்கலாம்” என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.