
மிரட்டல் வழக்கு தொடர்பாக தந்தையுடன் ஆஜராக ராணாவுக்கு நீதிமன்றம் உத்தரவு
தெலுங்கு திரையுலகில் வில்லன் மற்றும் கதாநாயகனாக நடித்து வருபவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் பல்வால் தேவன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார் ராணா. இவரது தந்தை சுரேஷ் பாபு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர். இந்த நிலையில் ராணா மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு உள்ளிட்ட இன்னும் சிலர் மீது தனது நிலத்தை அபகரிக்கும் விதத்தில் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக பிரமோத் குமார் என்கிற தொழிலதிபர் நம்பள்ளி கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
திரைப்பட நகர கூட்டுறவு சொசைட்டியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் இருந்து தன்னை வெளியேறும்படி ரவுடிகளை வைத்து ராணாவும் அவரது தந்தை சுரேஷ்பாபுவும் மிரட்டுவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் பிரமோத் குமார். மேலும் இதுகுறித்து ஏற்கனவே பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அவர்கள் அதை ஏற்கவில்லை என்பதால் தற்போது நேரடியாகவே நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதை தொடர்ந்து ராணா, அவரது தந்தை சுரேஷ்பாபு மற்றும் சிலருக்கு வரும் மே 1ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிலத்தின் மீது ஐந்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்றும் இதுகுறித்து இரண்டு தரப்பிலிருந்தும் விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே வழக்கு குறித்த முழு விபரங்கள் தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது.