30 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை துருக்கியில் தொடரும் மீட்பு நடவடிக்கை| Death toll exceeds 30,000 as rescue operations continue in Turkey

டமாஸ்கஸ்- துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் பலியானோரின் எண் ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், கட்டடக் குவியல்களுக்கு நடுவே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகிறது.

மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவானது.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டடங்கள் தரைமட்டமாகின.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி தொடர்கிறது.

தேடும் பணி

இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்து குவிந்துள்ள மீட்புப் படையினர், அங்கு நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு, பகல் பாராமல் இடிபாடுகளில் சிக்கிஉள்ளவர்களை காப்பாற்றி வருகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், காசியாண்டெப், எல்பிஸ்தான், அந்தாக்யா உள்ளிட்ட பகுதிகளில் சிக்கி உள்ளவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியின் அருகே உள்ள கஹ்ராமன்மாரசில், 7 மாத குழந்தை, 12 வயது சிறுவன் ஆகியோர் அடங்கிய குடும்பத்தினர் உயிருடன் நேற்று மீட்கப்பட்டனர்.

காசியாண்டெப் மாகாணத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும், ஹதாய் மாகாணத்தில், 7 வயது சிறுமியும் உயிருடன் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எல்பிஸ்தான் பகுதியில், 20 வயது இளம்பெண், 132 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார்.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். துருக்கியில் 27 ஆயிரம் பேரும், சிரியாவில் 3,000க்கும் அதிகமானோரும் உயிர்இழந்துள்ளனர்.

தஞ்சம்

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன், நிவாரண முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடுகளை இழந்தவர்கள், பனிப்பொழிவில் இருந்து தப்பிக்க சாலையோர தற்காலிக குடில்களிலும், அங்கு நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களிலும் தஞ்சம்அடைந்துள்ளனர்.

latest tamil news

ஒரு புறம், மனிதர்களை உயிருடன் மீட்கும் நடவடிக்கையும், மறுபுறம், குவியல் குவியல்களாக சடலங்களை புதைக்கும் அவலமும் ஒரு சேர துருக்கியில் அரங்கேறி வருகிறது.

மீட்கப்பட்ட பச்சிளங் குழந்தை

துருக்கியின் ஹதாய் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட 128 மணி நேரத்துக்குப் பின், இரண்டு மாத குழந்தை உயிருடன் நேற்று மீட்கப்பட்டது. இடிபாடுகளின் நடுவே, உயிருக்கு போராடிய குழந்தையை, நீண்ட போராட்டத்துக்குப் பின் வெளியே எடுத்த மீட்புக் குழுவினர், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைப் பார்த்த அப்பகுதியினர் உற்சாகத்தில் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆர்மீனியா எல்லை திறப்பு

துருக்கிக்கும், அதன் அண்டை நாடான ஆர்மீனியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பகை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 1993ல் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, துருக்கியுடனான எல்லையை ஆர்மீனியா நிரந்தரமாக மூடியது. இந்நிலையில், தற்போது துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக, எல்லை பகுதியை ஆர்மீனியா மீண்டும் திறந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.