சிம்லா: 40 நாட்கள் பரோலில் வந்த சாமியார், உங்களது பிரசார பாடலுக்கு இசையமைக்கிறாரா? என்று பாஜக முதல்வருக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் கேள்வி எழுப்பி உள்ளார். அரியானா மாநிலம் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகள் இருந்ததால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவர், தற்போது 40 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், ஓர் அறையில் அமர்ந்து கொண்டு பாடல் ஒன்றுக்கு குர்மீத் ராம் ரஹீம் சிங் இசையமைக்கும் வீடியோவை டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரின் அடுத்த தேர்தல் பிரசாரத்திற்காக இந்தப் பாடல் இசையமைக்கப்படுகிறதா? பாலியல் பலாத்காரம், கொலை குற்றவாளிக்கு குர்மீத் ராம் ரஹீமுக்கு ஏற்கனவே பரோல் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு 40 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது; அனைத்து எல்லைகளையும் தாண்டி வெட்கமின்றி உலாவுகிறார்கள்’ என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். பாஜகவை சேர்ந்த அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை கண்டிக்கும் வகையில், ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.