மதுரை: காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளதால், 20 பூக்கள் கொண்ட ஒரு பஞ்ச் மலர்கள் ரூ.450க்கு விற்பனையாகிறது.
ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் பிப்., 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதல் ஜோடிகள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையிலும், புதிதாக காதலை வெளிப்படுத்த நினைப்பவர்களும் ரோஜா பூக்களை வாங்கி தாங்கள் நேசிப்பவர்களுக்கு வழங்குவார்கள். மேலும், காதலர் தினத்தில் முக்கிய ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். இந்த நிகழ்ச்சிகளில் ரோஜா பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்படும்.
வெளிநாடுகளில் காதலர் கொண்டாட்டம் மிக விமர்சயைாக நடக்கும். அதனால், இந்த தினத்தில் உலகம் முழுவதும் ரோஜா பூக்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் வரவேற்பு உண்டு. தமிழகத்தில் ரோஜா பூக்கள் அதிகமாக உற்பத்தியாகும் ஓசூர், ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களில் இருந்து ரோஜா பூக்கள் உள்நாட்டிற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகும். காதலர் தினம் மட்டுமில்லாது புத்தாண்டு கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கும் ரோஜா பூக்கள் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும்.
நாளை (பிப்., 14) காதலர் தினம் என்பதால் ரோஜா பூக்களுக்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ரோஜா பூக்களை அதிகமானோர் வாங்கி செல்வதால் இந்த பூக்களுக்கு கடும் கிராக்கியும் ஏற்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் இந்த பூக்கள் விலை உயர்ந்துள்ளது. குளிர்பிரதேச நகரங்கில் பசுமை குடில்களில் பிரேத்தியமாக உற்பத்தி செய்த தாஜ்மகால், கிராண்ட் கலா, எல்லோ, பிங்க், ஒயிட் உள்ளிட்ட உயர்ரக வகை ரோஜா மலர்கள் மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கிடைக்கிறது.
முகூர்த்த நாட்கள், காதலர் தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் நாட்களை தவிர்த்து வழக்கமான நாட்களில் 20 பூக்கள் கொண்ட ஒரு பஞ்ச் பூக்கள் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகும். ஆனால், தற்போது மதுரையில் ஒரு பஞ்ச் பூக்கள் ரூ.450 வரை விற்பனையாகி வருகிறது.