திருவண்ணாமலையில் அரங்கேறிய ஏடிஎம் மையத்தில், இயந்திரத்தை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து, தமிழக போலீசார் 8 தனிப்படைகள் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தமிழக எல்லைகளில் ஏற்கனவே தீவிர வாகன சோதனை நடந்த நிலையில், தற்போது அரியானா, ஆந்திர மாநிலத்தில் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வங்கி அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களை கண்காணிக்கவும், முகத்தை அடையாளம் காணும் வகையில் மறைமுக கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், ஏடிஎம் இயந்திரங்களை சேதப்படுத்தினால், ஏடிஎம் மையங்களிலும் அருகில் உள்ள காவல் நிலையங்களிலும் அலாரம் ஒலிக்குமாறு அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் ரூ. 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடாத 6 காவல்துறையினரை மாவட்ட ஆயுதப் பணிக்கு பணியிட மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.