’பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்’- பழ.நெடுமாறன் பேட்டியும் அரசியல் தலைவர்களின் ரியாக்‌ஷனும்

”விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். விரைவில் அவர் வெளிப்படுவார்” என பழ. நெடுமாறன் தஞ்சையில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நம்முடைய தமிழக தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக இலங்கை மக்களின் போராட்டம் வெடித்து கிளம்பி நடைபெற்றுவரும் இந்த சூழலானது தமிழ் தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த சூழலில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இந்தச் செய்தி மூலம் உறுதியான முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புகிறேன். தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன்.
image
பிரபாகரன் அவர்களின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியின் பேரில் இங்கே வெளியிடுகிறேன். எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்பது உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கும் உலகம் முழுவதும் உள்ள நம்முடைய தமிழர்களுக்கும் ஆவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் விரைவில் அவர் வெளிப்படுவார் அதை உலகம் அறிந்து கொள்ளும்” என்று தெரிவித்தார்.
பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்புதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முத்தரசன்:
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், “விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்திருப்பது ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவதுபோல் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி; மேலும் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது” என்று கூறியுள்ளார்.
கே.எஸ்.அழகிரி:
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில், “பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி தான். பிரபாகரன் வந்தால் நான் சந்திப்பேன். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை. பழ.நெடுமாறன் பிரபாகரனை காட்டினால் நானும் சந்திப்பேன்” என்றார்.
ஜான்பாண்டியன்:
தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பேசுகையில், “மறைந்து வாழும் பழக்கம் பிரபாகரனுக்கு கிடையாது. பழ. நெடுமாறன் கூறிய கருத்திலிருந்து நான் முரண்படுகிறேன். பிரபாகரன் தொடர்பாக பழ. நெடுமாறன் கூறியிருப்பது தவறான முன் உதாரணம். மக்களிடையே இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதற்கு என்ன காரணம்? என அவர் பதில்சொல்ல வேண்டும்.
பிரபாகரன் மாவீரன், மறைந்து வாழும் தலைவர் அல்ல. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்வது தவறான ஒன்று என்பது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கருத்து” என்று கூறினார்.
வைகைச்செல்வன்:
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைகைசெல்வன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ” பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. எதிரியாக இருந்தாலும் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி மகிழ்ச்சிதான் அளிக்கும். பிரபாகரன் உயிரோடு வந்தால் பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழும். தமிழக மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். அவருடைய வரவு நல்வரவாக இருக்க வரவேற்கிறோம்” என்றார்.
image
சீமான்:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ”பிரபாகரன் தன் மக்களை விட்டு எங்கும் சென்றிருக்க மாட்டார். தன் உயிரை தற்காத்துக் கொண்டு ஓடுபவர் பிரபாகரன் அல்ல; அவர் வருவதாக இருந்திருந்தால் சொல்லிவிட்டு வர மாட்டார். மக்களிடம் வந்த பிறகுதான் சொல்லி இருப்பார். பிரபாகரன் இருந்திருந்தால் 15 ஆண்டுகள் பேசாமல் இருந்திருக்க மாட்டார்” என்றார்.
வைகோ:
மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், “விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறான் வெளியிட்ட அறிக்கையை என்னுடன் தொடர்பில் உள்ள போராளிகள் உறுதிப்படுத்தவில்லை. பிராபகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்.
இலங்கை ராணுவம் சொல்வதென்ன?
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவலில் உண்மையில்லை என்று பழ.நெடுமாறன் கூறிய தகவலுக்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ரவி ஹேரத் கூறுகையில், ”பிரபாகரன் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டுவிட்டார்; அதற்கான ஆதாரங்கள் உள்ளன. பிரபாகரன் கொல்லப்பட்டதை டிஎன்ஏ ஆதாரங்கள் மூலம் உறுதி செய்தோம். 2009ம் ஆண்டு மே 18-ந் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்லப்படுவது தவறான தகவல்கள். இதில் சந்தேகமே இல்லை” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.