பெங்களூரு: பெங்களூருவில் நடந்து வரும் சர்வதேச விமான கண்காட்சி மூலம் நமது பலத்தை உலக நாடுகளுக்கு காட்டியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். பெங்களூரு ஜக்கூர் விமான பயிற்சி மையத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. 14வது விமான கண்காட்சி நேற்று தொடங்கியது. ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது: நாடு சுதந்திரம் பெற்றதின் 75வது பவளவிழா கொண்டாடி வரும் காலத்தில் நமது நாடு வேகமாக முன்னேற்றமடைந்து வருகிறது. இதன் மூலம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறோம்.
ஒரு காலத்தில் அனைத்து துறையிலும் பின்னோக்கி சென்று கொண்டிருந்த தேசம், தற்போது முன்னோக்கி பயணிக்கிறது. நாம் தொலைநோக்கு பார்வையுடன் துரிதமான முடிவுகளை தைரியமாக எடுத்து வருகிறோம். நமது நாட்டின் வளர்ச்சி வேகம் எவ்வளவு இருந்தாலும் அது மக்களின் நலனுக்கானதாக மட்டுமே உள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பெரியளவில் மாற்றங்கள் நடந்து வருகிறது. இதை முடிவாக நினைக்காமல் தொடக்கமாக கருதுகிறோம். வரும் 2024-25ம் நிதியாண்டிற்குள் பாதுகாப்பு துறை மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் ஏற்றுமதி 5 பில்லியன் டாலராக கொண்டு செல்லும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா சேரவுள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பு துறையை பலப்படுத்த கர்நாடக மாநில இளைஞர்கள் முன்வர வேண்டும்.
உலகளவில் தொழில்நுட்ப வளர்ச்சி மின்னல் வேகத்தில் உள்ளது. அந்த வேகத்திற்கு இணையான நமது தொழில்நுட்பம் போட்டி போட்டு வளர வேண்டும். பெங்களூருவில் நடந்து வரும் விமான கண்காட்சி பல்வேறு வழிகளில் சிறப்பு பெற்றுள்ளது.
விமான கண்காட்சி வெறும் கண்காட்சி மட்டுமல்ல. நமது நாட்டின் சக்தியை உலகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது. இம்முறை நடந்து வரும் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று இருப்பது சிறப்பாகும். பெங்களூருவில் நடந்து வரும் விமான கண்காட்சி, விமான துறையில் மட்டுமில்லாமல் பாதுகாப்பு துறையிலும் புதிய அத்தியாயம் ஏற்படுத்தி வருகிறது. கண்காட்சியில் சர்வதேச நாடுகளில் இருந்து தொழில் முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் மூலம் ரூ.75 ஆயிரம் கோடி வரை தொழில் முதலீடு பெறுவோம். சில ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருட்கள் 75 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவந்தோம். தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளோம் என்றார்.
* பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி 35 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் நடக்கிறது.
* 67 ரகங்களை சேர்ந்த விமானங்கள் இடம் பெற்றுள்ளது.
* ஐந்து நாட்கள் நடக்கும் கண்காட்சியில் 806 ஷோக்கள் நடக்கிறது.
* 98 நாடுகளை சேர்ந்த 115 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது.
* இந்தியாவின் எல்சிஏ எம்கே2, இந்துஸ்தான் டர்போ ஷாப்ட் என்ஜின்-1200, ஆர்யுஏவி, இந்துஸ்தான்-228 விமானங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
விமானங்கள் சாகசம்: விமான கண்காட்சியை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி சுமார் 1 மணி நேரம் நடந்த விமானங்களின் சாகச நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானங்கள் சாரங்க், தேஜஸ், சுகாய் ஆகியவை வானில் பறந்து சாகசங்கள் புரிந்தன. நமது தேசிய கொடியில் உள்ள மூவர்ண நிறங்களில் புகை விட்டபடி விமானப்படையின் சூர்யகிரண் பிரிவினர் நிகழ்த்திய வான் சாகசம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இதை பிரதமர் உள்பட முக்கிய விவிஐபிகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கண்டு ரசித்தனர்.
கன்னட திரையுலகினருடன் மோடி: விமான கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக நேற்று முன்தினம் பெங்களூரு வந்த பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கினார். அப்போது சமீபத்தில் வெளியாகி வெற்றி வாகை சூடிய கேஜிஎப், காந்தாரா, கந்ததகுடி ஆகிய திரைப்படங்களை புகழ்ந்தார். மேலும் நடிகர்கள் யஷ், ரிஷ்ப்செட்டி, தயாரிப்பாளர் விஜய், அஷ்வினி புனித்ராஜ்குமார் ஆகியோரை அழைத்து பாராட்டினார்.