புதுடெல்லி: மக்களவையில் பிரதமர் மோடி குறித்து பேசியது தொடர்பாக பாஜ எம்பிக்கள் கொண்டு வந்த உரிமை மீறல் நோட்டீசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 15ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அதானி குழும விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். 2014ல் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு அதானியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது எப்படி, அதானிக்கும் – மோடிக்கும் இடையே என்ன மாதிரியான தொடர்பு என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ எம்பி நிஷிகாந்த் துபே, ராகுல் மீது உரிமை மீறல் நோட்டீசை தாக்கல் செய்தார். எந்த ஆதாரமும் இல்லாமல் பிரதமர் மோடியை ராகுல் குற்றம்சாட்டியதாக அவர் நோட்டீசில் குறிப்பிட்டார். இந்நிலையில், இந்த நோட்டீஸ் குறித்து ராகுல் தனது தரப்பு விளக்கத்தை வரும் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டுமென கெடு விதித்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.