புதுக்கோட்டை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் மீது போகோ சட்டம் பாய்ந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் பெற்றோர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ் இவரது வயது 52. இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி அப்பள்ளியில் மேல்நிலை கல்வி பயிலும் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அனுமதியின்றி கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார்.
மேலும் அங்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சுற்றுலா முடித்து மாணவிகளை ஊருக்கு அழைத்து வந்த உதவி தலைமை ஆசிரியர் இந்த விஷயம் பற்றி பெற்றோர்களிடமோ அல்லது யாரிடமோ தெரிவிக்க கூடாது எனவும் அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களது பிராக்டிகல் தேர்வுகளுக்கான மதிப்பெண்ணை குறைத்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இந்நிலையில் மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அவரது பெற்றோர் உடனடியாக உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் மீது புகார் அளித்தனர்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மாவட்ட கல்வி அதிகாரிகளை அழைத்து இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்து உரிய அறிக்கையை சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொண்டார். அவரது கட்டளைக் கிணங்க விசாரணையில் இறங்கிய கல்வித் துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் மாணவியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது நிரூபணம் ஆகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.