காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். இது, உணர்ச்சிகளின் பெரிய குரல். காதலர் தினத்தின் ஒரு முன்னோட்டமாக, பிப்ரவரி 13-ல் முத்த தினம் கொண்டாடப்படுகிறது.

முதல் காதல் எவ்வளவு ஸ்பெஷலோ, அதுபோல்தான் முதல் முத்தமும். காதலை வெளிப்படுத்துவதில் முத்தத்துக்கு ஈடு வேறு எதுவுமில்லை. நீங்கள் உங்கள் துணையின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த வாங்கிக்கொடுக்கும் விலை மிகுந்த பரிசுப் பொருள்களைவிட, அவரை நெஞ்சமெல்லாம் நேசத்தோடு அணைத்துத் தரும் ஒரு முத்தம் உணர்த்திவிடும் உங்கள் எல்லையற்ற காதலை!
ஒரு காதலன் தன் காதலிக்கோ, காதலி தன் காதலனுக்கோ கன்னம், கழுத்து, கைகள் என்று எங்கு வேண்டுமானாலும் முத்தம் தரலாம் என்றாலும் உதட்டில் தரப்படும் முத்தம்தான் காதலுக்கு செய்யப்படும் மரியாதை. அத்தகைய முத்தம் கொடுப்பதிலும் சில முறைகள் உள்ளன, பல வகைகள் உள்ளன… அவற்றில் சில இதோ…
லைட் கிஸ் (Light Kiss) – உதட்டோடு உதடு வைத்து இதமாக இதழ் பதித்து எடுக்கும் முத்தம்தான் இந்த லைட் கிஸ். காதலர்கள் தங்கள் காதலில் தொடக்கத்தில் கொடுத்துக்கொள்ளும் முத்தங்கள் பெரும்பாலும் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.
சிங்கிள் லிப் கிஸ் (Single Lip Kiss) – இது ஒருவகை மெலிதான உதட்டு முத்தம். தங்கள் இணையின் கீழ் உதட்டில் மட்டும் இதழ் பதித்து முத்தமிடுவது சிங்கிள் லிப் கிஸ்.
லிப் லாக் (Lip Lock) – `மெலிதான முத்தத்தில் சத்தேயில்லை…’ என்று காதலர்கள் எப்போது உணர்ந்துகொள்கிறார்களோ அப்போது ஆரம்பிக்கும் லிப் லாக்கின் ஆட்சி. உதட்டோடு உதடு அழுத்தமாகப் பதிய, காதலரின் மேல் உதட்டையும் கீழுதட்டையும் மாறி மாறி முத்தமிடும் முறைதான் இந்த லிப் லாக் கிஸ்.

பிரெஞ்சு கிஸ் (French Kiss) – ‘இன்ச்சு இன்ச்சா முத்தம் வைக்க இஷ்டம் இருக்கா… இல்ல பிரெஞ்சு முத்தம் வைப்பதிலே கஷ்டம் இருக்கா…’ என்று பாடல் வரிகளைக் கேள்விப்பட்டிருப்போம். அதென்ன பிரெஞ்சு முத்தம்? இதுதான் ரொம்ப நீளமான, ஆழமான முத்தம். இணையின் உதட்டோடு உதடு பதித்து, நாக்கோடு நாக்கை தொட்டுக்கொடுப்பது. வெகுநேரம் நீடிக்கும் முத்தம்.
பட்டாம்பூச்சி முத்தம் (Butterfly Kiss) – காதலர்கள் ஒருவர் மற்றொருவரின் கண்ணில் முத்தம் கொடுப்பது பட்டாம்பூச்சி முத்தம். முத்தம் கொடுக்கும்போது கண் இமைகள் மூடிக்கொண்டு, இமைகள் வந்து றெக்கைகள்போல மறைக்கும் என்பதால் இந்தப் பெயர்.
எஸ்கிமோ முத்தம் (Eskimo Kiss) – பனிப்பிரதேசங்களில் வசிக்கும் இனுயுட் இன மக்கள் ஒருவர் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த மூக்கோடு மூக்கு உரச நெற்றி அல்லது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடுவது வழக்கம். இதை அவர்கள் கலாசாரமாகவே பின்பற்றி வருகின்றனர். இவ்வாறு முத்தமிடுவதை எஸ்கிமோ முத்தம் என்கிறார்கள்.
ஃப்ரீஸ் கிஸ் (Freeze Kiss) – இது ஒரு ஜாலியான முத்த வகை. ஒரு சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக்கொண்டு பின்னர் உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய்க்குள் உங்களது நாவால் பாஸ் செய்ய வேண்டும். அப்படிச் செய்த பிறகு அவரின் உதட்டில் நீங்கள் தரும் முத்தம் உங்கள் காதலைப்போலவே சில்லென்று இருக்கும்.
லிக் கிஸ் (Lick Kiss) – முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்கள் துணையின் மேல் உதடு மற்றும் கீழ் உதட்டை உங்கள் நாவால் தடவிக்கொடுக்க வேண்டும். பிறகு முத்தத்துக்குச் செல்லலாம்.

டாக்கிங் கிஸ் (Talking Kiss) – இது ஒரு வேடிக்கையான முத்தம். ஆனால், உணர்வுகளைத் தூண்டக்கூடியது. நீங்களும் உங்கள் இணையும் நேருக்கு நேர் முகத்தை வைத்துக்கொள்ளுங்கள். இருவரது உதடுகளும் நெருக்கமாக இருக்க வேண்டும். உதட்டோடு உதடு உரச வேண்டும். ஆனால், முத்தம் தரக் கூடாது. எதையாவது சிறிதுநேரம் ஜாலியாகப் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இது காதலர்களுக்கிடையே ரொமான்ஸை பலப்படுத்தும்.
ஃப்ரூட்டி கிஸ் (Fruity Kiss) – இதுவும் கிட்டத்தட்ட ஃப்ரீஸ் கிஸ் போலத்தான். இதில் ஐஸ் கியூப்புக்குப் பதிலாக திராட்சை, ஸ்ட்ராபெரி அல்லது ஏதேனும் நறுக்கிய பழத்துண்டுகளை எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்து, பின்னர் உங்கள் பார்ட்னரின் உதட்டுடன் வைத்து அழுத்த வேண்டும். அப்போது பழத்திலிருந்து வழியும் ரசத்தை இருவரும் இணைந்து பருகி இந்த ஃப்ரூட்டி கிஸ்ஸை சுவைக்கலாம்.
முத்தத்தின் இடமும் பொருளும்..!
முத்தம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்று முறைகள் இருப்பதைப்போல, முத்தம் எங்கு கொடுக்கப்படுகிறதோ அதற்கென சில அர்த்தங்களும் உள்ளன.
கன்னம் – ஒருவர் உங்களுக்குக் கன்னத்தில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களிடம் நட்புடன் இருக்க விரும்புகிறார் என்று அர்த்தம்.
கண் – காதலில் கண்களில் கொடுக்கப்படும் முத்தத்துக்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று பொருள்.
கை – கைகளில் முத்தம் கொடுப்பது மரியாதைக்குரிய ஒரு செயலாகப் பார்க்கப்படுகிறது. யார் உங்களுக்கு கைகளில் முத்தம் கொடுக்கிறார்களோ அவர்கள் உங்கள் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளவர்கள்.
கழுத்து – தன் இணையை இழுத்து அணைத்து கழுத்தில் தரும் முத்தம் ரொம்பவே ரொமான்டிக்கானது. கழுத்தில் முத்தம் கொடுத்தால் ‘நீ எனக்கு வேண்டும்’ என்று அர்த்தம்.
மூக்கு – உங்கள் காதலர் கன்னத்தோடு கன்னம் உரசி உங்கள் மூக்கின் மேல் பதிக்கும் முத்தத்துக்கு `உன்னைவிட அழகு வேறு யாருமில்லை’ என்று பொருள்.
நெற்றி – ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலை ஒரு நெற்றி முத்தம் தந்துவிடும். உங்கள் இணை உங்களுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தால் அதற்கு, `நான் வாழ்நாள் முழுவதும் உனக்குத் துணையாக இருப்பேன்’ என்று அர்த்தம்.
உதடு – உதட்டு முத்தம் ரொம்பவே உணர்ச்சிகரமானது. உங்கள் காதலர் உதட்டில் முத்தம் தந்தால் அவர் தன் உயிருக்கும் மேலாக உங்களை நேசிக்கிறார் என்று அர்த்தம்.

அதுபோல் முத்தம் தரும்போது உங்கள் காதலர் கண்களை மூடிக்கொண்டால், முத்த தருணத்தை அவர் ஆழ்ந்து ரசிக்கிறார் என்றும், கண்களைத் திறந்திருந்தால் உங்கள் உணர்வுகளின் வெளிப்பாட்டையும் வெட்கத்தையும் ரசிக்கிறார் என்றும் அர்த்தம்.
முத்தத்தில் இவ்வளவு உள்ளர்த்தங்கள் பொதிந்துள்ளன. மேலும் ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. முத்தம் கொடுப்பதன் மூலம் தலைவலி, மன அழுத்தம் குறையும். உடல் ரிலாக்ஸ் ஆகும். தொடர்ந்து 1 நிமிடத்துக்கு மேல் முத்தம் கொடுக்கும்போது 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இன்ப உணர்ச்சிகளுக்குக் காரணமான ஹார்மோன்களின் சுரப்பும் அதிகமாகும்.
இப்படி எல்லாம் முத்தம் கொடுக்கக் கூடாது..!
வாயோடு வாய்வைத்து முத்தம் கொடுத்துக்கொள்ளும் வேளையில் உமிழ்நீர் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிரிகள் இடம் மாறுகின்றன. எனவே, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்றும் காய்ச்சல், சுவாசப் பிரச்னைகள் உங்களுக்கு இருக்கும் சமயத்தில் உங்கள் இணைக்கு முத்தம் கொடுக்காதீர்கள்.
புகைபிடித்துவிட்டோ, மது அருந்திவிட்டோ முத்தம் தரக் கூடாது. அது அருவருப்பை ஏற்படுத்தலாம்.

முத்தம் கொடுக்கும் வேளைகளில் நீங்கள் ஃபிரெஷ்ஷாக இருக்க வேண்டும். நறுமணத்துக்கு மௌத் ஸ்பிரே போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
ஏதோ கடமைக்குத் தருவதைப்போல் ஈடுபாடு இல்லாமல் அரைகுறையாக முத்தம் தரக்கூடாது. அதுபோல் முத்தம் தரும் வேளைகளில் மொபைல் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.