ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : தமிழ்நாடு அரசு

சென்னை : ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, 2023-ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) மும்பை இந்திய ஹஜ் குழுவின் ”HCoI” செயலியை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்திசெய்யலாம். விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப்படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். எந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத்தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும்.

இந்த ஆண்டு, ஹஜ் பயணிகள் சென்னை புறப்பாட்டுத்தளத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம். ஹஜ் 2023-க்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற மார்ச் 10-ந்தேதி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.