துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 35,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் தணியவில்லை. இப்படியான சூழலில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட 10 நாள்களுக்குப் பிறகு, நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

ஏற்கெனவே நியூசிலாந்தின் ஆக்லாந்து (Auckland), நேப்பியர் (Napier) போன்ற நகரங்களில் கேப்ரியல் புயல், வெள்ளம் காரணமாக மக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில், தலைநகர் வெலிங்டனில் (Wellington) 6.1 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நிலநடுக்கம் தொடர்பாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் வெலிங்டனுக்கு அருகிலுள்ள லோயர் ஹட்டிலிருந்து (Lower Hutt) வடமேற்கே 78 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டிருக்கிறது.
#Earthquake confirmed by seismic data.⚠Preliminary info: M6.1 || 78 km NW of Lower Hutt (New Zealand) || 5 min ago (local time 19:38:07). Follow the thread for the updates pic.twitter.com/QLRK4EGfmz
— EMSC (@LastQuake) February 15, 2023
அதோடு இந்த நிலநடுக்கம் 48 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும், இதன் மையம் பராபரமு (Paraparaumu) நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் அரசு நில அதிர்வு கண்காணிப்பு ஜியோனெட் (Government Seismic Monitor Geonet) தெரிவித்திருக்கிறது. அதேசமயம் நிலநடுக்கத்தால், இதுவரை எந்தவொரு உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.