திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் குடிக்க தண்ணீர் கேட்டு வீட்டுக்குள் வந்த வாலிபர், தனியாக இருந்த 80 வயது மூதாட்டியை தாக்கி பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் வலியதுறை பகுதியில் உள்ள வீட்டுக்குள் நேற்று மதியம் வாலிபர் ஒருவர் புகுந்துள்ளார். வீட்டில் 80 வயதான மூதாட்டி மட்டுமே இருந்து உள்ளார். உடனே தனக்கு குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று வாலிபர் கேட்டார். தொடர்ந்து தண்ணீர் எடுப்பதற்காக மூதாட்டி சென்றார். அப்போது பின்னால் சென்ற வாலிபர், மூதாட்டியை தாக்கி பலாத்காரம் செய்தார். அவரது கூக்குரலைக் கேட்டு பக்கத்து வீட்டினர் விரைந்து சென்றுள்ளனர். சுதாரித்துக் கொண்ட வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து வலியதுறை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மூதாட்டியை தாக்கி பலாத்காரம் செய்தது வலியதுறை வெட்டுகாடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (42) என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார். ரஞ்சித் மீது ஏற்கனவே பலாத்காரம், அடிதடி, கஞ்சா விற்பனை உள்பட ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
* தமிழக சிறுமி சீரழிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளி விடுமுறையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில் மாணவி கர்ப்பிணியானார். இதுகுறித்து அவரது பெற்றோர் கல்பெட்டா பனமரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அஷ்வந்தை கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு போலீசார் அஷ்வந்த்தை மானந்தவாடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.