மதுரை அருகே 16 வயது சிறுமியை தொடர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த அவரையே இரண்டாவதாக திருமணம் செய்ய இருந்த சிறுமியின் சித்தப்பா, இதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் தாத்தாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மதுரையை அடுத்த திருமங்கலம் கூடகோவில் பகுதியைச் சார்ந்த முதியவர்க்கு ஒருவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் அவரது மகன் உயிரிழந்தார். இதனால் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என பெண் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக தனது மூத்த மகளிடம் தெரிவித்திருக்கிறார் அந்த முதியவர்.
வேறொரு பெண்ணை திருமணம் செய்து ஆண் வாரிசு வந்தால் சொத்து பிரச்சனை ஏற்படும் எனக் கருதிய அந்த பெண் தனது 16 வயது மகளையே தந்தைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனது சித்தியின் கணவர் உதவியை நாடி இருக்கிறார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
தாத்தாவிடம் இருந்து உன்னை நான் காப்பாற்றுகிறேன் எனக் கூறி ஆசை வார்த்தைகளை சொல்லி ஏமாற்றி தனது பாலியல் தேவைகளுக்கு அந்த சிறுமியை பயன்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் சித்தப்பாவும் அந்த சிறுமியும் தனிமையில் இருப்பதை அவரது தாய் பார்த்து விட்டார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் குடும்பத்திற்கு ஆண் வாரிசு தானே வேண்டும் அதை நான் பெற்றுத் தருகிறேன் சிறுமியை எனக்கே திருமணம் செய்து வையுங்கள் என தனது மாமனாரிடமும் அந்த சிறுமியின் தாயாரிடமும் தெரிவித்திருக்கிறார் இந்த நபர் . இதற்கு அவர்களும் சம்மதித்த நிலையில் சித்தப்பா சிறுமியை திருமணம் செய்தால் நம் குடும்பத்தை பற்றி தவறாக பேசுவார்கள் எனவே சிறுமியை நீங்கள் வேறொரு பகுதிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ளுங்கள்.
இங்கு யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க நாங்கள் சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விடுகிறோம் என்ன திட்டம் தீட்டியுள்ளனர். மேலும் அவர்களின் திட்டப்படி காவல் நிலையத்திலும் சிறுமியை காணவில்லை என போய் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகார் தொடர்பாக காவல்துறை விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரிய வந்து காவல்துறையினரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து சிறுமியை அவர்களிடமிருந்து மீட்ட காவல்துறை மகளிர் காப்பகத்தில் சிறுமியை ஒப்படைத்தனர். மேலும் சிறுமியின் தாத்தா அவரது தாய் மற்றும் சித்தப்பாவை கைது செய்து அவர்களின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.