வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
என் அழகானவன்;
என்னோடு பழகியவன்;
வாட்டம் போக்குபவன்;
பளபளப்பானவன்;
இளஞ்சிவப்பு நிறத்தழகன்;
என் உடலுக்கு கேடயமானவன்;கொழுப்பைக் குறைக்க உதவுபவன்
நான் அழுதால் தானழுது
நான் சிரித்தால் தான் சிரித்து
எனக்கு எனக்கான
ஒரே உயிரானவன்.
என் ஜீவனை புதுப்பிக்கிற சக்தி அவனுக்கு மட்டுமே உண்டு.
என் கொஞ்ச லுக்காக காத்திருப்பவன்.
தினமும் என்னுடைய காலை /மாலை பொழுதுகளை அழகாக்குபவன்.
மனிதத் தனத்தை மறந்து இயந்திரத்தனமாகிவிட்ட மனசுக்கு அவனோடு பேசும் பொழுதுகளில் தான் நிம்மதியே கிடைக்கிறது.
சாம்பாருக்கு நீள நீளமாய்…
வத்த குழம்பு க்கு முழுதாய் உரித்து குண்டு குண்டாய்..
பனீர் டிக்காவுக்கு சதுரசதுரமாய்..
குருமாவுக்கு பொடியாகவும் இல்லாமல் பெரியதாகவும் இல்லாமல் நடுத்தரமாய்…

ஆம்லெட்டுக்கு மிகவும்பொடியாய்… பச்சடிக்கு மிகவும் மெல்லிசாக நீள நீளமாய்… அதுவே இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பச்சடிக்கு குறுக்கும் நெடுக்குமாக வெட்டியதாய்…
கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள மேல் தோலை மட்டும் உரித்து…
வெங்காய பஜ்ஜிக்கு வெங்காயத்தை மட்டும் கழுவித் தோலை உரிக்காமல் வில்லைகளாக நறுக்கி மாவில் தோய்த்து காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்க வெங்காய பஜ்ஜி அழகாய் கண்ணடிக்கும்.
வெங்காய வத்தல் போட… மாவை கூழாக காய்ச்சி பொடியாக நறுக்கி அதில் தூவிக்கலக்கி மாவைக்கிள்ளி எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில்/ துணியில்வைத்து வெயிலில் காயவைத்து நன்கு காய்ந்ததும் எண்ணையில்பொரித்தெடுக்க…சுவை அள்ளும்.

சப்பாத்திக்கு சைடிஷ் ஆக வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயத்தை நன்கு வதக்கி உப்பு தனி மிளகாய்த்தூள் போட்டுவதக்கி சிவந்து எடுக்க 2 சப்பாத்தி சாப்பிடற இடத்தில் 3 சப்பாத்தி உள்ளே போகும். வெங்காயத்தை நறுக்கும்போது வரும் ஒரு வாசம் இருக்கே.. அந்த வாசம் ..பச்சிளங் குழந்தையின் கன்னத்தில் பால் சாப்பிட்டதும்ஒரு வாசம் வருமே அது போல் இருக்கும்.
எத்தனை கவலைகள்
எத்தனை பிரச்சினைகள்
என்னுள் எழுந்தாலும்
காலை எழுந்தவுடன் அன்றைய சமையலுக்கு தேவையான வெங்காயத்தை தேவையான வடிவத்தில் வெட்டி வைக்க… கவலைகளும் பிரச்சினைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். உண்மை பாஸ்! நம்புங்க பாஸ்!

எனக்கு உண்மையிலேயே வெங்காயம் நறுக்குவதற்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் அன்றைய சமையலுக்கு தேவையான காய்கறிகளில் முதலில் நான் எடுப்பது வெங்காயத்தைத் தான்… பிரியாணி,பச்சடி ,பொரியல் ,கூட்டு சாம்பார் ,வத்தக்குழம்பு.. இப்படி எல்லாவற்றிற்கும் அததற்கு தேவையான வடிவத்தில் வெட்டி வைத்த பிறகேஅடுப்பை பற்ற வைப்பேன்.
எனது உறவுகள்/ நட்புகள் யார் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும்… சமையலுக்கு என்னை அழைத்தால் முதலில் என்ன மெனு என்று கேட்ட பிறகு அதற்கு தேவையான வெங்காயத்தை முதலில் நறுக்கி வைத்துக் கொள்வேன்.

நான் சமையல் போட்டிகளுக்கு நடுவராக செல்லும் போதும் சரி/ யாருக்காவது கிளாஸ் எடுக்க வேண்டும் என்றாலும் சரி முதலில் நான் ஆரம்பிப்பது வெங்காயத்தை,எதெதற்கு எப்படியெப்படி பண்ணவேண்டும்… என்று சொல்லிக் கொடுத்த பிறகு மற்ற பாடங்களை ஆரம்பிப்பேன். சமையலுக்கு சுவை கூட்டும் சூத்திரம்… வெங்காயத்தை நறுக்குவதில் தான் என்றால் மிகையில்லை .
இப்படி … (என் அழகனை) வெங்காயத்தை சமையலுக்கு ஏற்றார்போல் நறுக்குவதில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே (வெற்றியே) அடங்கி இருக்கிறது.!
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.