காவல் துறை விசாரணை: வழக்குகளை கையாள்வது குறித்து விழிப்புணர்வு!

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடந்தாலும், சாதாரணமான ஒவ்வொரு காவல்துறை விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெள்ளி வியாபாரி புகார்!

சென்னையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி ரமேஷ் என்பவர், கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் சுமித்தி சலானி என்பவருடன் வியாபார தொடர்பு வைத்திருந்தார். வெள்ளி விளக்குகள் சப்ளை செய்த வகையில் தனக்கு தர வேண்டிய பாக்கியை தராததால், சலானிக்கு எதிராக ரமேஷ், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார்

இது சம்பந்தமாக தன்னை விசாரணைக்கு அழைத்து கட்ட பஞ்சாயத்து செய்ததுடன், தனது மெர்சிடஸ் பென்ஸ் காரின் ஆவணங்களை வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டதாக உதவி ஆணையர் லட்சுமணனுக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த மனித உரிமை ஆணையம், உதவி ஆணையருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது.

உதவி ஆணையர் தொடர்ந்த வழக்கு!

இந்த உத்தரவை எதிர்த்து லட்சுமணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அமர்வு, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்ததில் ரமேஷ், எந்தவித மனித உரிமை மீறலுக்கும் ஆளாக்கப்படவில்லை என்று கூறி, மனித உரிமை ஆணைய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

காவல் துறையினருக்கு விழிப்புணர்வு!

மேலும், காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நடந்தாலும், சாதாரணமான ஒவ்வொரு காவல்துறை விசாரணையயும் மனித உரிமை மீறலாக கருத முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், குற்ற வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகளின் வேறுபாடுகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதால், சட்டம் – ஒழுங்கை பராமரிக்கும் காவல் துறையினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், இதுபோன்ற வழக்குகளை கையாள்வது குறித்து காவல் துறையினருக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ஆரம்ப நிலையிலேயே காவல் துறையினர் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பது, ஒட்டுமொத்த போலீஸ் படையினரையும் ஊக்கக்குறைவுபடுத்த காரணமாகிவிடும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.