
சென்னையில் கிரிடாய் (CREDAI) அமைப்பின் ரியல் எஸ்டேட் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (பிப்.18) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,” அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி. நம்முடைய இலக்கு பெரிதாக உள்ளதால், முயற்சியும் பெரிதாக உள்ளது. பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்வதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
குடிசையில்லா நகரங்களை உருவாக்க குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். நகரமயமாதலில் தமிழகம் முன்னிலை மாநிலமாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
நகரங்கள், கிராமப்புறங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறோம். புதிய துணைக்கோள் நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். மனைப்பிரிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஒற்றைச் சாளர முறை செயல்பாட்டில் உள்ளது. திட்ட அனுமதிக்கான ஒப்புதலை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகையில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகிறது. எல்லோருக்குமான வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம். எனவே நீங்களும் எங்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும்” இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.