அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறும்: மாநில மகளிர் ஆணைய தலைவர் நம்பிக்கை

அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடைபெறும் என்று மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி கூறினார்.

விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் செயல்படும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடம், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி, மாவட்ட ஆட்சியர் சி.பழனி முன்னிலையில் நேற்று விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தின் மீது புகார்கள் வந்ததன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை மூலம் ஆய்வு மேற்கொண்டு, ஆசிரமத்திலிருந்து 141 பேர் மீட்கப்பட்டனர். மற்றொரு இல்லத்தில் 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நல்ல நிலையில் உள்ளவர்கள், மாவட்டத்தில் செயல்படும் மற்ற இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 38 ஆண்கள், 16 பெண்கள் என மொத்தம் 54 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட 2 பெண்களும் அடங்குவர்.

அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, இவ்வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடைபெறும். இதுவரை ஆசிரம உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் ஆணையம் மூலம்விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை தமிழக அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சீதாபதி சொக்கலிங்கம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்கீதா, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.