புதுக்கோட்டை மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் விட்டு வெளியேறிய காளை ஒன்று கலெக்சன் பாயிண்டை தாண்டி சுமார் 15 அடி உயரம் வரை தாவி குதித்து சென்ற காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி காண்போரை வியக்க வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ஆலத்தூர் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி மிக விமர்சையாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் திருச்சி தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 737 காளைகள் வாடிவாசல் இருந்து அவிழ்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளை ஒன்று வாடிவாசலில் இருந்து வீரர்களின் பிடியில் சிக்காமல் வெளியேறி கலெக்சன் பாயிண்டில் அதன் உரிமையாளரிடமும் பிடிபடாமல் வேகமாக ஓடியுள்ளது. அப்போது எதிர்புறம் இருந்த குளத்து கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் மிரண்ட அந்த காளை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் அந்த குளத்தின் கரையில் இருந்து 15 அடி தூரத்திற்கு தாவி குதித்து பின் ஓடி சென்றது.
இந்தக் காட்சியை தனது செல்போனில் ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்தக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி காண்போரை வியக்க வைத்துள்ளது. சம்பந்தப்பட்ட காளையின் உரிமையாளர் பெயர் விவரங்கள் இதுவரையில் தெரியாத நிலையில் அந்த காளை தாவி குதித்த காட்சிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
